Employee Dismissal : "சட்டையை பிடித்து திட்டியதற்கெல்லாம் பணி நீக்கம் செய்ய முடியாது" : தொழிலாளிக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..
உயர் அதிகாரியுடன் சண்டை போடுவதோ அல்லது மோசமான வார்த்தைகளால் திட்டுவதால் மட்டுமே ஒருவரை பணிநீக்கம் செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது.
இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தேயிலை தொழிலாளர் நலச் சங்கத்தின் செயலாளராக இருப்பவர் எஸ். ராஜா. கடந்த 2009ஆம் ஆண்டு, இவர், தனது உயர் அதிகாரிகளை பார்த்து கெட்ட வார்த்தைகளால் திட்டி, உயர் அதிகாரி ஒருவரின் சட்டையை பிடித்து இழுத்ததாகக் கூறப்படுகிறது.
வழக்கின் பின்னணி:
இதற்காக, ஒழுங்கு நடவடிக்கையாக ராஜா பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து, தொழிலாளர் நீதிமன்றத்தில் ஒழுங்கு நடவடிக்கைக்கு எதிராக ராஜா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தொழிலாளர் நீதிமன்றம் அவரை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டது.
அதுமட்டும் இன்றி, அவர் வேலையின்றி இருந்த காலத்திற்கு 50 சதவிகித ஊதியத்தை வழங்கவும் உத்தரவிட்டது. தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு விசாரித்த தனி நீதிபதி, தொழிலாளர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்தார். இதையடுத்து ராஜா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், ஆர். கலைமதி ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டனர்.
தொழிலாளிக்கு ஆதரவாக அதிரடி கருத்துகள்:
அப்போது, தொழிலாளிக்கு ஆதரவாக பல அதிரடி கருத்துகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். "கடந்த 2001ஆம் சம்பந்தப்பட்ட ஊழியர் ஆவேசமாக நடந்து கொண்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னரே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. எனவே, இதை வைத்து அவர் அடிக்கடி இதுபோல நடந்து கொள்கிறார் எனக் கூற முடியாது.
தவறான வார்த்தைகள் பயன்படுத்துவதால் மட்டும் ஒருவர் மீது பணி நீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாது. அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட தொழிலாளர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். உயர் அதிகாரி முதலில் அந்த ஊழியரின் சட்டையைப் பிடித்ததே திடீரென அவர் ஆத்திரமடையக் காரணமாக இருக்கிறது.
"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டுவார் என எதிர்பார்க்க முடியாது"
ஊழியர் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று இயேசுவைப் போல நடந்து கொள்வார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அதேநேரம் நாங்கள் இப்படிச் சொல்வதால் அந்த ஊழியரின் செயலை நியாயப்படுத்துகிறோம் என்றோ அவரது தவறான நடத்தை சரி என்று சொல்கிறோம் என்றோ அர்த்தம் இல்லை" என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றத்தை மேற்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ராஜாவை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. அதேநேரம் அவர் பணியில் இல்லாத காலத்திற்கான ஊதியத்தை அவருக்கு வழங்கத் தேவையில்லை என்றும் கூறியுள்ளது.