அண்ணாசாலை கட்டடம் இடிக்கும்போது ஏற்பட்ட விபத்து விவகாரம்: ஒப்பந்ததாரர் ஜாமீன் மனு தள்ளுபடி..
அண்ணாசாலையில் கட்டடம் இடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அண்ணாசாலையில் கட்டடம் இடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அண்ணாசாலையில் கட்டடம் இடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில், இடிபாடுகள் விழுந்து இளம் பெண் உயிரிழந்தார். இதில் கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அந்த மனு விசாரணைக்கு வந்த போது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சென்னையின் பரபரப்பான மற்றும் முக்கியமான சாலைகளில் ஒன்று அண்ணாசாலை ஆகும். அண்ணாசாலையில் உள்ள ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சற்று முன்பு சுரங்கப்பாதை அருகே பழைய கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தை இடிக்கும் பணிகள் நடைபெற்றது.
இந்த நிலையில், கட்டிடங்கள் இடிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது, அந்த இடிபாடுகள் சாலை வரை சரிந்து விழுந்தது. அப்போது, அந்த கடிடத்தின் முன்பு நடைபாதையில் சென்று கொண்டிருந்த இளம்பெண் உள்பட 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
உடனே, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் பெயர் பிரியா என்றும் அவர் தேனியைச் சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டது.
இந்த சம்பவத்தில் ஜே.சி.பி. இயந்திர உரிமையாளர் ஞானசேகர், ஜே.சி.பி. ஓட்டுனர் பாலாஜி மற்றும் மேற்பார்வையாளர் பிரபு ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஜே.சி.பி. உரிமையாளர் ஞானசேகர் மற்றும் ஓட்டுனர் பாலாஜி இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கட்டட ஒப்பந்ததாரரையும் கைது செய்தனர், அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவர் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.