ADMK Case: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு இன்று விசாரணை.. யாருக்கு சாதகம்?
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கடந்த ஜூலை 11, 2022 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஓ. பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தனி நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒபிஎஸ் தரப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதாவது எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும், தீர்மானங்கள் செல்லும் என தெரிவிக்கப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவையடுத்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதியின் தீர்ப்பையடுத்து எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
ஓபிஎஸ் தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு சென்னை உயிர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வு விசாரணை செய்தனர்.
இந்த வழக்கில் வாதிட்ட ஓபிஎஸ் தரப்பு பி.எஸ் ராமன், “ஓ பன்னீர்செல்வத்தை நீக்கியது தவறு என்றால் அதன்பின் நடந்த நடைமுறைகள் மட்டும் எப்படி சரியாகும்” என கேள்வி எழுப்பினார். இந்த வாதத்தை முன்வைத்த பின் நீதிபதிகள் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கபட்டுவிட்டதா என கேள்வி எழுப்பினார்கள்.
மூத்த வழக்கறிஞர் அப்துல்சலீம் வாதிடுகையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என கூறினார். மேலும் உச்சநீதிமன்றம் உத்தரவு தெளிவாக உள்ளது, எங்களை வாக்களிக்க அனுமதித்துள்ளது என மனோஜ்பாண்டியன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஈபிஎஸ் தரப்பில் ”தற்போது ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை. பொது செயலாளர் பதவி மட்டுமே உள்ளது. கட்சியில் 95% ஈ.பி.எஸ் தலைமை ஏற்றுள்ளனர். கட்சி விதிகளின் படி தேர்தல் நடத்தபட்டு பொதுச் செயலாளராக தேர்வாகி உள்ளார்” என வாதிடப்பட்டது. மேலும் இந்த வழக்கு ஏப்ரல் 3ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக செயல்பட தடைவிதிக்கக்கோரி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அப்படி உத்தரவு பிறப்பித்தால் அது சிக்கலை ஏற்படுத்தி விடும் என தெரிவித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அமர்வு, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 20ஆம் தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஏப்ரல் 16ஆம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவசர வழக்காக விசாரிக்க ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது.