Yali Statue: கோயிலில் காட்சி தரும் பிரம்மாண்ட யாளி சிற்பங்கள்..! இத்தனை வகைகள் இருக்கா...?
தமிழகத்தில் சிற்ப கலைஞர்களின் பிரமாண்ட யாளி சிலை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
தஞ்சாவூர்: தமிழகத்தில் உள்ள கோயில்களில் சிங்கத்தின் கால்கள், குதிரையின் உடல், யானையின் துதிக்கை, கூரிய பற்கள், பெரிய தோற்றம். வலிமையின் அடையாளமாக விளங்கும் மூன்று மிருகங்களின் சேர்க்கையாக காட்சியளிக்கும் யாளி சிலையை நிச்சயம் பார்த்திருக்கலாம். யாளியின் தோற்றம் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு ஒரே ஒரு சான்று கோயில் சிற்பங்களே. யாளியின் உருவ அமைப்பை கொண்டு அதனை மூன்று வகையாக வகைப்படுத்துவார்கள்.
- மகரயாளி என்பதை பெரும்பாலும் ஆட்டுத்தலையுடன் இருக்கும் யாளி என்று கருதப்படுகிறது. எனினும் மகரம் என்பது முதலையை குறிப்பதால் இது முதலையின் உடலைப்புடன் கூடிய ஒரு யாளியாக இருக்க வேண்டும்.
- சிம்மயாளி– சிங்கத்தின் தலையுடன் கூடிய யாளி. அதிகமான கோயில் சிற்பங்களில் இடம்பெறுள்ள யாளி வகை இதுதான் என்றால் மிகையில்லை.
- கஜயாளி/யானை யாளி– யானையின் துதிக்கையுடன் விளங்கும் இந்த வகை யாளி அமைப்பு தென்னிந்திய கோயில் அமைப்புகளில் மிகப்பிரசித்தி பெற்றது. மிரட்டலான உருவ அமைப்புடன் கம்பீரமாக காட்சியளிக்கும்.
- அஸ்வயாளி- குதிரை முகம் கொண்டது, ஸ்வன யாளி/ஞமலி யாளி- நாய் முகம் கொண்ட யாளி, மூஷிக யாளி- எலிமுகம் கொண்ட யாளி.
யாளியின் வலிமையை அவற்றை சிற்பங்களில் முன்னிலைப்படுத்தும் விதத்திலேயே உணர்ந்து கொள்ளலாம். சிம்மயாளியின் உருவங்கள் பெரும்பாலும் ஒரு சிங்கத்தை பின்னங்கால்களால் மிதித்தவாறு முன்னங்கால்களை உயர்த்தி பாயும் விதத்தில் நிற்கும். யாளியின் அளவோடு ஒப்பிடும்போது சிங்கம் ஒரு “சிறு எலி” போன்றுதான் காணப்படும்.
அவ்வாறே கஜயாளியின் சிற்பங்களிலும் அவற்றின் வலிமை சிறப்பாக வெளிக்காட்டப்படும். சிம்மயாளியை போலவே பின்னங்கால்களை தூக்கி நிற்பதோடு முன்னங்கால்களால் தன்னுடைய துதிக்கையை பிடித்த வண்ணம் நிற்கும். துதிக்கையின் தந்தத்தில் ஒரு யானையை தரையில் இருந்து பிரித்திழுக்கும் வகையில் செதுக்கப்பட்டிருக்கும்.
யாளியுடன் ஒப்பிடும்போது யானையும் கூட மிகச்சிறியதே என்பது இதன் கருத்து. இன்றளவில் நம்முடைய உலகில் தரைவாழ் வேட்டைவிலங்குகளில் சக்திவாய்ந்தது சிங்கம். தாவர உண்ணிகளில் சக்தி மிகுந்தது யானை. இவை இரண்டுமே யாளிகளின் இரைகளாக இருப்பதாக உருவகப்படுத்துவத்தில் இருந்து யாளிகளின் வலிமை முன்னிலைப்படுத்தப்படுகிறது.
தென்னக கோயில்கள்:
ஆரம்பகால கோயில்கள் செங்கற்களால் ஆனதாக இருந்தது. 7ம் நூற்றாண்டில் பாறைகளை குடைந்து செய்யப்படும் குடவரை கோயில் முறை உருவானது. 10ம் நூற்றாண்டு முதலே கற்றளி எனப்படும் கருங்கல்லால் ஆன கோயில்கள் கட்டும் முறை அதிகரித்தது. ஆரம்பகால கற்றளிகளிலோ, குடைவரை கோயில்களிலோ யாளி குறித்தான சிலைகள் அல்லது தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. பாரம்பரிய சிற்ப சாஸ்திர நூல்களிலும் இதற்கான குறிப்புகள் இல்லை.
நாயக்கர் ஆட்சியை தொடர்ந்தே தென்னகத்தின் கோயில்களில் யாளி சிற்பத்துக்கான முக்கியத்துவம் அதிகரித்தது. மதுரையில் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள யாளி சிற்பங்கள் மிகப்பிரசித்தி பெற்றவை. தமிழகம் முழுவதிலும் உள்ள பல முன்னணி ஆலயங்களில் இன்று காணப்படும் யாளியுடன் கூடிய தூண்கள் பெரும்பாலும் 16ம் நூற்றாண்டு அளவில் அல்லது அதற்கு பின்னர் உருவானவையாகவே இருக்கும். தமிழகத்தை தாண்டி கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் உருவான கோயில்களில் கூட யாளியின் சிற்பங்கள் அதிகளவு கிடைத்துள்ளன.
பிரம்மாண்டம்:
முக்கியமாக பழைய விஜயநகர பேரரசின் தலைநகரான ஹம்பியில் உள்ள கோவில் சிதைவுகளில் பிரம்மிக்க வைக்கும் வகையிலான யாளி சிற்பங்கள் உள்ளன. பெரும்பாலும் சிம்மயாளி அல்லது கஜயாளியே பயன்படுத்தப்பட்டாலும் மீனாட்சி அம்மன் கோவிலில் நாய் யாளியும், விஜயநகரத்தின் கிருஷ்ணன் கோவிலில் எலி யாளியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தஞ்சை பெரிய கோயில் உட்பட பல கோயில்களில் யாளியின் சிற்பங்கள் உள்ளன.
தற்போதைய காலக்கட்டத்தில் இந்த யாளி பற்றிய ஆராய்ச்சிகள் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் தஞ்சை பெரிய கோயில் உட்பட பல கோயில்களுக்கு செல்பவர்கள் இந்த யாளி சிலையை காண வெகு ஆர்வம் காட்டுகின்றனர். அதன் பிரம்மாண்டத்தை கண்டு வியந்தும் போகின்றனர்.