தஞ்சை பெரியகோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்..
தஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது.
மதுரை சித்திரைத் திருவிழா போன்று தஞ்சை சித்திரைத் திருவிழாவும் மிகவும் பிரசித்திபெற்ற ஒன்று. தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை பெருவிழா, தேரோட்டத்துடன் 18 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு பொதுமுடக்கம் காரணமாக தஞ்சை பெரிய கோவிலில் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா கொண்டாடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதன்படி, சித்திரைத் திருவிழாவிற்காக இன்று காலை தஞ்சை பெரிய கோவிலில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர், மேள தாளத்துடன் கொடி ஏற்றப்பட்டது.
தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், விதிகளுக்கு உட்பட்டு கோயில் வளாகத்திற்குள்ளேயே புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும் என்று அறநிலையத்துறையினர் தெரிவித்தனர். கொரோனா பரவல் காரணமாக, இந்த ஆண்டும் சித்திரைத் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.