ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுகிறதா? காலையிலே டெல்லி புறப்பட்டார் தமிழக ஆளுநர்!
பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகித்து வருபவர் ஆர்.என்.ரவி. இவர் ஆளுநராக பொறுப்பேற்றது முதல் தி.மு.க. அரசுக்கும், இவருக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. ஆளுங்கட்சிக்கும், ஆளுநருக்கும் இடையே பனிப்போர் நிலவி வரும் சூழலில் அவருடைய பதவிக்காலம் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதியே முடிந்தது.
டெல்லி சென்றார் ஆளுநர்:
இதையடுத்து, தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அதுதொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகளவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தெரியவந்துள்ளது.
பதவிக்காலம் நீட்டிப்பா? புதிய ஆளுநரா?
இந்த ஆலோசனையின்போது அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதலே பல்வேறு கருத்து வேறுபாடுகளை ஆளுங்கட்சியுடன் கொண்டிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, சமீபகாலமாக தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து எந்தவொரு சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாணய வெளியீட்டு விழாவிற்காக தமிழ்நாடு வந்திருந்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் நேரில் சந்தித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தினார். அவர் பதவியில் நீட்டிக்கப்படுவாரா? அல்லது புதிய ஆளுநர் தமிழ்நாட்டிற்கு நியமிக்கப்படுவாரா? என்ற பரபரப்பான சூழல் நிலவி வரும் சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி சென்றிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த டெல்லி பயணத்திற்கு பிறகு சில முக்கிய மாற்றங்கள் நிகழலாம் என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடக்கம்! தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
மேலும் படிக்க: Breaking News LIVE: பஞ்சாமிர்தம், சஷ்டி புத்தகம் அடங்கிய பைகள்.. முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலம்