NEET Bill: நீட் விவகாரத்தில் ஆளுநருக்கு அதிகாரம் என்ன? தடையை தகர்க்க என்ன வழி? சட்டமும் வாய்ப்பும்..!
“ நீட் மசோதவை இப்படி அனுப்புவதற்கு ஆளுநருக்கு அதிகாரமே கிடையாது. அவர் டெக்னிக்கலாக அனுப்பியிருக்கிறார். அவர் மத்திய அரசு சொல்லி செய்கிறார்.
தமிழக மாணவர்களின் கல்வி வளர்ச்சியை தடை செய்யும் வகையில், நீட் தேர்வு இருப்பதாக தமிழக அரசு தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. ஆட்சிக்கு வரும் முன்னரே, நீட் தேர்வு எதிர்ப்பை முன்வைத்து பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின் ஜூன் 17 ஆம் தேதி பிரதமரை சந்தித்து நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இது மட்டுமன்றி, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா செப்டம்பர் 13 சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ஜனாபதி ஒப்புதலுக்காக முதலில் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. நீண்ட நாட்களாக ஆளுநர் மாளிகையிலேயே இருந்த நீட்விலக்கு மசோதாவை ஆளுநர் தமிழக அரசுக்கே ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
வழக்கறிஞர் தமிழ்மணி
இந்த நிலையில், வழக்கறிஞர் தமிழ்மணியிடம் பேசினோம். இது குறித்து அவர் கூறும்போது, “ நீட் விலக்கு மசோதவை இப்படி அனுப்புவதற்கே ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. அவர் டெக்னிக்கலாக அனுப்பியிருக்கிறார். அவர் மத்திய அரசு சொல்லி செய்கிறார். அவருடைய மரியாதையை அவரே குறைத்து கொண்டிருக்கிறார். தமிழக அரசால் நீட் தேர்வு விலக்கை பெறவே முடியாது.” என்றார்.
சட்டத்தின் வாயிலாக பெற முடியுமா என்று கேட்டதற்கு, “ நிச்சயமாக பெற முடியாது. இது அரசியல். மக்கள் ஒன்றை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகதான். இங்கு மத்திய அரசும் சட்டமும் ஒன்றுதான். அதனால் தமிழகத்திற்கு நீட் விலக்கு என்பது கிடைக்கவே கிடைக்காது” என்றார்.
இது குறித்து திமுக வழக்கறிஞர் சரவணன் கூறும் போது, “ நீட் பிரச்னையை பொருத்தவரைக்கு தற்போது அது ஒரு அரசியல் பிரச்னையாக மாறியிருக்கிறது. நீட் என்பது RSS -ன் ஐடியாலாஜி. அதை இந்தியா முழுக்க திணிக்க நினைக்கிறது பாஜக. உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது என்றால், மாநிலங்கள் இதனை வேண்டாம் என்று நினைத்தால் 254 (2) படி செயல்படலாம் என்று கூறியிருக்கிறது.
இது மாநிலத்திற்கு ஒன்றியத்திற்கும் இடையே நடக்கக்கூடிய போர். என்னிடம் அதிகாரம் இருக்கிறது என்று காட்ட நினைக்கிறது பாஜக. ஆனால் அரசியல் அப்படி செய்ய முடியாது.
இது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கையில் இருந்தால் பராவாயில்லை. கல்வி பொது பட்டியலில் இருக்கிறது. சுகாதாரம் மாநில பட்டியலில் இருக்கிறது. ஆகையால் இதில், மத்திய அரசுக்கு மட்டும்தான் அதிகாரம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. 252 (2) படி ஒன்றிய அரசு ஒரு சட்டம் இயற்றினால், அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அதனை சட்டமாக்கலாம் என்று இருக்கிறது. ஆனால் இதனை தடுத்து கொண்டிருக்கிறது பாஜக. ஒரு வேளை குடியரசு தலைவர் நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தரவில்லை என்றால் அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று கேட்டதற்கு, “அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதற்கான சீரிய நடவடிக்கைகளை திமுக அரசு செய்து வருகிறது” என்று கூறினார்