PTR Quits DMK IT Wing Secy: திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பை ராஜினாமா செய்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்?
திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராக 2017ஆம் ஆண்டு முதல் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இருந்து வந்தார்.
தமிழ்நாடு அரசின் நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செயல்பட்டு வருகிறார். அந்த பொறுப்புடன் சேர்த்து இவர் திமுக கட்சி பதவியிலும் இருந்து வந்தார். திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராகவும் அவர் இருந்து வந்தார்.
இந்நிலையில் இந்தப் பதவியை தற்போது அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது நிதியமைச்சராக இருந்து வரும் பழனிவேல் தியாகராஜனுக்கு பணிச்சுமைகள் அதிகமாக உள்ளதாக தெரிகிறது. மேலும் அவர் ஜிஎஸ்டி கவுன்சிலிலும் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று வருவதால் அவருடைய பணிகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அவரால் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு சரியாக நேரம் ஒதுக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாக கருதப்படுகிறது. இது தொடர்பாக அவர் கட்சியின் தலைமையிடத்தில் தெரிவித்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
மேலும் கட்சி சார்பில் அந்த பதவிக்கு புதிய நபரை நியமிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. அதன்படி திமுகவின் அடுத்த தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராக டிஆர்பி ராஜா நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. மூன்று முறை மன்னார்குடியிலிருந்து தேர்வாகியுள்ள அவர் இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப பிரிவை முதன்முதலாக அதிமுக கட்சி தொடங்கியது. 2014ஆம் ஆண்டு அதிமுக இதை தொடங்கியது. அதன்பின்னர் 2014 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அந்தக் கட்சி சிறப்பான வெற்றியை பெற்றது. அதன்பின்னர் திமுகவும் 2017ஆம் ஆண்டு தங்களுடைய தகவல் தொழில்நுட்ப அணியை தொடங்கியது. அப்போது முதல் அந்த அணியின் செயலாளராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருந்து வருகிறார். திமுக ஆட்சிக்கு வர இந்த தொழில்நுட்ப பிரிவும் ஒரு முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. எனினும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சர் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் தொழில்நுட்ப பிரிவில் அதிக கவனம் செலுத்தவில்லை. எனவே இந்தப் பிரிவிற்கு புதியவரை செயலாளராக நியமித்து மீண்டும் அதன் முழு செயல்பாட்டை பெற அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் பூஸ்டர் டோஸ் போடும் பணியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்