TN Congress : கே.எஸ்.அழகிரிக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி...! தமிழக காங்கிரசுக்கு விரைவில் புதிய தலைவரா..?
ரூபி மனோகரனை கட்சியில் இருந்து நீக்க ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், தற்போது மூத்த தலைவர்கள் அனைவரும் கே.எஸ். அழகிரிக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் என்பது புதிதல்ல. இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு அதன் உட்கட்சி மோதலும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது. மூத்த அரசியல் தலைவர்களான மம்தா பானர்ஜி, சரத் பவார் ஆகியோர் எல்லாம் ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதன் தலைமையுடன் மாற்று கருத்து கொண்ட காரணத்தால் கட்சியிலிருந்து வெளியேறி புது கட்சியை தொடங்கியவர்கள்.
உட்கட்சி மோதல் :
காங்கிரஸில் உட்கட்சி மோதல் என்பது தற்போது வரை தொடர்ந்து வருகிறது. கேரளாவில் உம்மன் சாண்டி மற்றும் ரமேஷ் சென்னிதலா, கர்நாடகாவில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார், ராஜஸ்தானில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோருக்கிடையே மோதல் நிலவி வருகிறது.
இதில், தமிழ்நாட்டை பொறுத்தவரை, பல்வேறு பிரிவுகளாக கட்சி பிளவுண்டு இருக்கிறது. கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.எஸ். அழகிரி என பல தலைவர்களின் கீழ் தொண்டர்கள் செயல்பட்டு வருகின்றனர். கட்சியில் நிலவும் பிளவை எதிரொலிக்கும் வகையிலேயே, சமீபத்தில் மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மோதல் வெடித்தது.
கே.எஸ்.அழகிரிக்கு எதிராக போர்க்கொடி:
நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரும் மாநில பொருளாளருமான ரூபி மனோகரன் ஆதரவாளர்களுக்கும், மாநில தலைவர் கே.எஸ். அழகிரி ஆதரவாளர்களுக்கும் மோதல் வெடித்தது. ரூபி மனோகரனை கட்சியில் இருந்து நீக்க ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், தற்போது மூத்த தலைவர்கள் அனைவரும் கே.எஸ். அழகிரிக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளினை முன்னிட்டு இன்று அவரின் திருவுருவச் சிலைக்கு கே.எஸ் அழகரி காலை 10.30 மணிக்கும் மற்ற தலைவர்களான தங்கபாலு. ஈ. வி.கே.எஸ் இளங்கோவன், திருநாவுக்கரசு, எம்.கிருஷணசாமி ஆகியோர் காலை.11 மணிக்கும் தனித்தனியே மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதிய தலைமையா..?
இதனை தொடர்ந்து, சத்தியமூர்த்தி பவன் நிகழ்ச்சியையும் முன்னாள் மாநில தலைவர்கள் புறக்கணித்துள்ளனர். இதை தொடர்ந்து, தனியார் ஓட்டலில் கூடி அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், சத்தியமூர்த்தி பவன் மோதல் சம்பவம் தொடர்பாக அழகிரிக்கு எதிராக டெல்லி தலைமையிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர்.
குறிப்பாக, அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் டெல்லி தலைமையிடம் வலியுறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி மோதல் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது.
கே.எஸ். அழகிரி தலைமையின் கீழ், மாநில காங்கிரஸ் சிறப்பாகவே செயல்பட்டு வந்துள்ளது. கடந்த மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் வெற்றிபெற்றது. 2021 சட்டப்பேரவை தேர்தலில், 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18இல் வெற்றிபெற்றது. இச்சூழலில், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், காங்கிரஸ் யார் தலைமையின் கீழ் செயல்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.