தேர்தலில் வென்ற கதை.!வெளிவராத பின்னணி தகவல்கள்; 16-ம்தேதி வெளியாகிறது முதல்வர் எழுதிய அதிரடி புத்தகம்
CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள தென் திசையின் தீர்ப்பு என்ற புத்தகமானது வரும் 16 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், புத்தகம் குறித்து சுவாரஸ்ய தகவல் ABP -நாடுவுக்கு கிடைத்துள்ளது.
அரசியல் தலைவர், கட்சித்தலைவர், பேச்சாளர், செயல்வீரர், திரைப்பட நடிகர் என அறியப்பட்ட முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், ஒரு எழுத்தாளர் என்பது பலருக்குத் தெரியாது. அவர் “உங்களில் ஒருவன்” என்ற தமது சுயசரிதை புத்தகம் மட்டுமல்ல, “பயணச் சிறகுகள்” என்ற பல சுவாரஸ்யத் தகவல்கள் அடங்கிய பயணக்கட்டுரை புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
“தென் திசையின் தீர்ப்பு”
அவரது புத்தகப் படைப்புகளின் வரிசையில், விரைவில் இணையப்போகும் புத்தகம், “தென் திசையின் தீர்ப்பு” என்ற தலைப்பிலான அரசியல் புத்தகம்தான். வரும் 16-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் புத்தகம் குறித்து, பல சுவாரஸ்ய தகவல்களை ஏபிபி நாடு-விற்கு கிடைத்துள்ளன.
கடந்த முறை, முதல்வர் ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்” என்ற சுயசரிதைப் புத்தகம், பல தலைவர்கள் முன்னியைில் ராகுல்காந்தி வெளியிட மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது அனைவரும் அறிந்தது. ஆனால், இந்த முறை, அவர் எழுதிய “தென் திசையின் தீர்ப்பு” புத்தகம், தமது உயிர்மூச்சு என அவர் கூறும் அவரது கட்சியின் மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தின் போது, அதாவது வரும் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்தப் புத்தகத்தை, திமுக-வின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட, அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர். பாலு பெற்றுக் கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
புத்தகத்தில் இருப்பது என்ன?
இந்தப் புத்தகத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் 2024 குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இந்தத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியும் சேர்த்து, நாற்பதுக்கு நாற்பது வெற்றியை திமுக கூட்டணி எப்படி சாத்தியமாக்கியது, தாம் அமைத்த தேர்தல் வியூகம், 2023-ம் ஆண்டு இந்தியா கூட்டணிக்கு விதை போட்ட சென்னை ஒய்.எம்.சி.ஏ-வில் நடைபெற்ற தமது பிறந்தநாள் கூட்டம், பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டங்கள், திமுக வாக்குச் சாவடி பொறுப்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட பயிலரங்கம், கூட்டணி கட்சிகளுக்கு இடையே நடைபெற்ற தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் தேர்வு, தாம் பங்கேற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டங்கள், தேர்தல் விளம்பரங்கள், தேர்தல் முடிவுகள், தம்முடைய தலைமையில் வென்ற தேர்தல்களின் பட்டியல், புள்ளி விவரங்கள், ஏராளமான புகைப்படங்கள், இன்போகிராபிக் எனும் தகவல் திரள்கள் என விரிவாகப்பதிவு செய்கிறதாம் இந்தப் புத்தகம். ஒட்டுமொத்தமாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்த நூல், மக்களவைத் தேர்தல்( தமிழ்நாடு- புதுச்சேரி) 2024 குறித்த ஓர் ஆவணப் பெட்டகமாக இருக்கும் என அவரது தரப்பில் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, திமுக-வின் முக்கிய நிர்வாகிகள் பலரிடம் பேசிய போது, ”சர்வாதிகாரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையே நடைபெற்ற போர்தான் 18வது மக்களவைத் தேர்தல். அதில் எப்படி, தென்திசையில் தமிழகம் வென்றுகாட்டி, சர்வாதிகாரிகளுக்குப் புத்தி புகட்டியது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்தப் புத்தகம் தெள்ளத்தெளிவாக என்றென்றும் எடுத்துரைக்கும்” என உற்சாகமாக கூறுகின்றனர்.
திமுக-வும் அதன்கூட்டணி கட்சிகளும், தமிழ்நாடு- புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் பெற்ற 100-க்கு 100 சதவீத வெற்றியும் அதன் பின்னணியில் உள்ளோரின் உழைப்பையும் வெளிப்படுத்தும் ஆவணமாக, வரலாற்று வெற்றியை பறைச்சாற்றும் பெட்டகமாக எழுத்தாளர் மு.க.ஸ்டாலின் எழுதிய “ 40/40 – தென்திசையின் தீர்ப்பு“ புத்தகம் இருக்கும் என்பதே திமுக தொண்டர்களின் கருத்தாக எதிரொலிக்கிறது.