TN Cabinet: பொன்முடிக்கு கடைசி வாய்ப்பு? இன்று மாறும் அமைச்சரவை? கூட்டத்தில் ஸ்டாலின் முக்கிய முடிவு?
TN Cabinet: பரபரப்பான சூழலுக்கு மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு அமைச்சரவைக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

TN Cabinet: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக்கூட்டம், தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.
அமைச்சரவைக் கூட்டம்:
பரபரப்புக்கு சற்றும் பஞ்சமின்றி தமிழக அரசியல் களம் சூடுபிடித்துக் கொண்டிருக்கும் சூழலில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. தலைமை செயலகத்தில் மாலை 6.30 மணிக்கு கூட்டம் தொடங்க உள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது விவாதம் மேற்கொள்ளப்பட உள்ளது. பிற்பகலுடன் சட்டப்பேரவை அலுவல் முடிவடைய, அதனை தொடர்ந்து மாலையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
புதிய திட்டங்களுக்கு ஒப்புதல்:
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. அதன்படி, தமிழ்நாட்டிற்கு வரும் முக்கிய தொழில் திட்டங்ககள் மற்றும் விரிவாக்கப்பட உள்ள தொழிற்சாலை பணிகளுக்கு அனுமதி வழங்கப்படலாம். மக்கள் நலத்திட்டங்களை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சென்று சேர்ப்பது, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம். அடுத்த ஓராண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதுதொடர்பாகவும் அமைச்சரவையில் விவாதிக்கப்படக் கூடும் என கருதப்படுகிறது.
பொன்முடிக்கு கடைசி வாய்ப்பு?
பெண்கள் மற்றும் இந்து மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக, அமைச்சர் பொன்முடிக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இதையடுத்து, திமுகவில் அவர் வகித்து வந்த துணைப் பொதுச்செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. பொன்முடியும் தனது பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். ஆனாலும், தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் அவரது அமைச்சர் பதவியையும் பறிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். எனவே, சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருப்பதை கருத்தில் கொண்டு, பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்படுமா? அல்லது மூத்த மற்றும் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர், மேலும் பொன்முடியின் மீதுள்ள வழக்குகளை கருத்தில் கொண்டு அவரது அமைச்சர் பதவி தப்புமா? என்பது குறித்தும் இன்று முடிவு எடுக்கப்படலாம் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவையில் மாற்றம்?
ஒருவேளை தேர்தலை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டால், பொன்முடியுடன் சேர்ந்து திறம்பட செயல்படாத மேலும் சில அமைச்சர்களும் பதவியை இழக்கலாம் என தெரிகிறது. அதன்படி குறைந்தது நான்கு பேர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு, புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம். கொங்கு மண்டலம் மற்றும் மத்திய மாவட்டங்களில், அதிமுக மற்றும் பாஜகவிற்கு எதிராக திமுகவை வலுப்படுத்தும் நோக்கில் புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம். எனவே, அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.





















