Neet Special Assembly | ஆளுநரை தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்க கூடாது - உத்தரவிட்ட சபாநாயகர் அப்பாவு
தமிழக ஆளுநர் சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தை பொதுவெளியில் வெளியிடுவது உகந்தததா? என்று கடிதத்தை வெளியிட்டவர்கள் உணர வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு பேரவையில் பேசினார்.
![Neet Special Assembly | ஆளுநரை தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்க கூடாது - உத்தரவிட்ட சபாநாயகர் அப்பாவு tamilnadu assembly speaker appavu speech special assembly meeting for NEET exemption bill Neet Special Assembly | ஆளுநரை தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்க கூடாது - உத்தரவிட்ட சபாநாயகர் அப்பாவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/08/96bd4ed5c006cbd3a502a3ffeb57e032_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதால், சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீண்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி மசோதா நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.
உறுப்பினர்களுக்கு மட்டும் அதன் நகல் அனுப்பப்பட்டு மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டது. ஏனென்றால், பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவு குறித்த செய்தி உறுப்பினர்களுக்கு மட்டுமே தெரியப்படுத்த வேண்டும் என்று நான் இருந்தேன். ஆனால், ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பை நான் படித்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அதை வெளியிட்டது சரியான நடைமுறையா? என்று என்னிடம் பலர் கேட்டனர். பேரவை ஒருமனதாக நிறைவேற்றிய சட்டமுன்வடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அது சட்டமாக காலதாமதாக்கப்பட்டதால் அரசியல் கட்சிகள், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனநாயகவழியில் போராட உரிமை உண்டு.
ஆனால் பேரவைக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தை பொதுவெளியில் தெரிவித்து, விவாதத்திற்கும், விமர்சனத்திற்கும் வித்திட்டது ஏற்புடையதா? என்று உரியவர்கள் சிந்திக்க வேண்டும். பேரவைத் தலைவர் என்ற முறையில் நான் வெளியில் கருத்துக்கூற கூடாது. ஆனால், இங்கே பேசலாம். அரசமைப்புச் சட்டத்தில் இயன்றளவு விரைவில் என்று உள்ளது. பேரவை சட்டமுன்வடிவை நிறைவேற்றியது 13.9.2021. ஆளுநர் பதில் வரப்பெற்றது 1.2.2022. இயன்றவு விரைவு என்பது இதுதானா? இது சரிதானா? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். உங்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுக்காக உங்களின் உரிமைக்குரலும் எனக்கு கேட்கிறது. என்னைப் பொறுத்தவரை எனது பொறுப்பில் இருந்து நடந்து கொள்ள நான் கடுகளவும் தவற மாட்டேன். ஆனால், பேரவைத் தலைவர் என்ற பதவியில் இருந்து கட்சி சார்பற்ற நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்னாலும், கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் சொல்லிக்கொடுத்த பாடம் எனக்கு நினைவில் உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 92ன் படி, குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் அல்லது நீதிமன்றம் ஒன்றின் நடவடிக்கை பற்றி களங்கம் கற்பிக்கும் வகையில் பேசக்கூடாது. விவாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் பெயரை பயன்படுத்தக்கூடாது. இது ஏற்கனவே இருந்த விதி. பேரவை விதி 287ன் கீழ் மேற்காணும் விதியின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு, அன்றைக்கு இருந்த ஆளுநர் பற்றி சகட்டு மேனிக்கு வசவுகள் இருந்த காலமும் உண்டு.
கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு, பேரவைக்குழு தலைவராக பொறுப்பு வகித்தபோது எக்காரணம் கொண்டும், எக்காலத்திலும் பேரவையில் ஆளுநர் பற்றி விமர்சிக்கக்கூடாது என்று பேரவைக்குழு முடிவு எடுத்து அதன்படி பேரவை விதிகள் 287ன் கீழ் ஒரு காப்புரை சேர்க்கப்பட்டது. அதுதான் மேற்படி விதியை பயன்படுத்தக்கூடாது என்று சேர்க்கப்பட்டது. இந்த விதிகள் 12.5.1999ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இந்த மாண்பை பொறுப்பேற்ற முதல் காப்பாற்றி வருகிறோம். பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவு கருத்துக்கள் பற்றி மட்டுமே பேச வேண்டும். ஆளுநர் பற்றி கண்டிப்பாக பேசக்கூடாது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)