TN Assembly: பரபரப்பான தமிழகம்! இன்று தொடங்குகிறது தமிழக சட்டசபை - அனல் பறக்கப்போகும் விவாதங்கள்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பலரும் உயிரிழந்துள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
தமிழக அரசின் சட்டசபை ஆண்டுதோறும் ஜூன் மாதம் கூடுவது வழக்கம். நடப்பாண்டிற்கான சட்டசபை கூட்டம் வரும் ஜூன் 20ம் தேதி கூடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, தமிழக சட்டசபை கூட்டம் இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூடுகிறது.
இன்று தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர்:
முதல் நாளான இன்று சட்டசபையில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கும், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வாக இருந்து காலமான புகழேந்தி மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது. இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு முதல் நாளான இன்று சட்டசபை ஒத்திவைக்கப்படும்.
இதையடுத்து, நாளை முதல் சட்டசபை கூட்டத் தொடர் விவாதங்களுடன் நடைபெற உள்ளது. வழக்கமாக, தமிழக சட்டசபை கூட்டத்தொடரானது காலை 10 மணிக்கு தொடங்குவது வழக்கம். ஆனால், நடப்பாண்டு சட்டசபை கூட்டத்தொடர் காலை 9.30 மணிக்கே தொடங்கும் என்று ஏற்கனவே சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.
எப்படி செயல்படும்?
வழக்கமாக, சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி முதல் 1 மணி நேரம் கேள்வி – பதில் நேரமாக நடைபெறும். இந்த 1 மணி நேரம் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து, அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்களிடம் கோரிக்கைகளையும், கேள்விகளையும் முன்வைப்பார்கள். அதற்கு அவர்கள் பதில் அளிப்பார்கள்.
1 மணி நேரம் முடிந்த பிறகு, முதலமைச்சர் 110 விதியின் கீழ் ஏதேனும் திட்டங்களை கொண்டு வந்தால், அதற்கான அறிவிப்பை வெளியிடுவார். அதன்பின்பு, 55 விதியின் கீழ் ஏதேனும் சிறப்பு தீர்மானம் விவாதத்திற்கு கொண்டு வரப்பட்டு, விவாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. 110 விதி மீதான அறிவிப்பு மற்றும் 55 விதியின் கீழ் சிறப்பு தீர்மானம் என்பது தினசரி நடப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. அதன்பின்பு, ஒவ்வொரு துறை சார்ந்த மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும்.
இனி காலை 9.30 மணிக்கு கூட்டத்தொடர்:
22-ந் தேதியில் இருந்து காலை 9.30 மணிக்கு தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். அதன்பின்பு, மாலை 5 மணியளவில் தொடங்கி இரவு 8 மணி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும். நாளை சட்டசபை கூட்டம் நடக்கும்போது, காலை 9.30 மணிக்கு சட்டசபையை நடத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும்.
இந்த சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான 29ம் தேதி மட்டும் காலையில் சட்டசபை கூட்டம் நடைபெறும். இந்த சட்டசபை கூட்டத்தொடரில் மொத்தம் 16 அமர்வுகள் நடைபெற உள்ளது. இதில் மானியக் கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது.
சட்டசபையில் எதிரொலிக்குமா கள்ளச்சாராய விவகாரம்?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பதால் வழக்கத்தை விட சட்டசபையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு சட்டசபை கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 29 பேர் உயிரிழந்த விவகாரம் பெரியளவில் சட்டசபையில் அதிர்வலையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: Kallakurichi Illicit Liquor: CBCID வசம் செல்லும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: முதல்வர் அதிரடி உத்தரவு