Bhasha Samman Award: தமிழறிஞர் தட்சிணாமூர்த்திக்கு சாகித்ய அகாடமியின் பாஷா சம்மான் விருது; யார் இவர்?
சாகித்ய அகாடமியின் 2019 ஆம் ஆண்டுக்கான “பாஷா சம்மான் விருது” முனைவர் அ.தட்சிணாமூர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமியின் 2019 ஆம் ஆண்டுக்கான “பாஷா சம்மான் விருது” முனைவர் அ.தட்சிணாமூர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது இந்திய மொழிகளில் செவ்விலக்கியம் இடைக்கால இலக்கியம் (Classical and Medieval literature) தொடர்பான சிறந்த சேவைக்கு ஒவ்வோராண்டும் வழங்கப்படும் விருதாகும். மார்ச் 13ஆம் தேதி மாலை டெல்லி ரவீந்திர பவனில் வால்மீகி சபாகர் அரங்கில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழறிஞர் தட்சிணாமூர்த்தி
தமிழறிஞர் தட்சிணாமூர்த்திக்குத் தனி அறிமுகம் தேவையில்லை. தனது 35ஆவது வயதில் “தமிழர் நாகரிகமும் பண்பாடும்” எனும் நூலின் மூலம் தன் தமிழ்ப் பணியைத் தொடங்கியவர் தட்சிணாமூர்த்தி. கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழுக்கும் தமிழாய்வுக்கும், தமிழிலக்கிய மொழிபெயர்ப்புகளுக்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, உடல்நலக் குறைவுக்கு மத்தியில் 85 வயதிலும் தமிழுக்குத் தொண்டாற்றி வருகிறார்.
1938ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் நெடுவாக்கோட்டை எனும் கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் படிப்பு வாசனை இல்லாத பெற்றோருக்குப் பிறந்தவர் தட்சிணாமூர்த்தி. நூலாசிரியர், உரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர், பதிப்பாசிரியர், கட்டுரையாளர், பேச்சாளர் என்று பல பரிமாணங்களில் இவரது சாதனைகள் உள்ளன.
32 தமிழிலக்கியங்களை ஆங்கிலப்படுத்திய தமிழாசிரியர்
தமிழர் நாகரிகமும் பண்பாடும், தமிழியற் சிந்தனைகள், சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள், பெயரும் பின்னணியும், திணைப்புலவரும் தெய்வப்புலவரும் என்று 5 ஆய்வு நூல்களை இயற்றி உள்ளார். அதேபோல சங்க இலக்கியங்களுக்கான உரைகள் இரண்டு- ஐங்குறுநூறு, பரிபாடல் (ஒரு பகுதி). மேலும் செம்மொழி நிறுவனத்தின் பத்துப்பாட்டு மொழிபெயர்ப்புத் தொகுதியின் பதிப்பாசிரியராகவும் பணி செய்துள்ளார்.
முப்பத்திரண்டு தமிழிலக்கியங்களை ஆங்கிலப்படுத்திய தமிழாசிரியர் என்ற பெருமைக்கும் உரியவர். அவற்றில் இருபது செவ்விலக்கியங்கள், மூன்று இடைக்கால இலக்கியங்கள், ஒன்பது தற்கால இலக்கியங்கள்.இருபது செவ்விலக்கியங்களில் பதிமூன்று சங்க நூல்களும், ஏழு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் அடங்கும். அகநானூற்றின் முதல் முழு ஆங்கில மொழிபெயர்ப்பை (1999) தந்தவர் என்ற பெருமை தட்சிணாமூர்த்தியையே சாரும்.
அதனைத் தொடர்ந்து, 2001இல் நற்றிணையின் மூலத்துக்கு நெருக்கமான முதல் முழுமையான மொழிபெயர்ப்பு, 2007 இல் குறுந்தொகையின் இரண்டாவது முழுமையான மொழிபெயர்ப்பு (முதல் மொழிபெயர்ப்பு 31 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது), 2010 இல் ஆறு பதினெண்கீழ்க்கணக்கு அக நூல்களின் முதல் முழுமையான மொழிபெயர்ப்பு, 2012 இல் பத்துப்பாட்டின் இரண்டாவது முழுமையான மொழிபெயர்ப்பு (முதல் மொழிபெயர்ப்பு 67 ஆண்டுகளுக்கு முன் வெளியானது), 2023 இல் திருக்குறளின் மொழிபெயர்ப்பு என்று செவ்விலக்கியங்களை ஆங்கில மொழிபெயர்ப்புகள் மூலம் தமிழுலகத்திற்கும் அப்பால் கொண்டு சென்றவர்.
பாரதிதாசன் நூல்களை முதலில் ஆங்கிலப்படுத்தியவர்
இவை மட்டுமல்லாது, அபிராமி அந்தாதி, நீதி வெண்பா, பெருமாள் திருமொழி, பாரதிதாசனின் – சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக்கவி, கடல்மேல் குமிழிகள், தமிழச்சியின் கத்தி, காதலா கடமையா, இருண்ட வீடு, நல்ல தீர்ப்பு, பாரதி அறுபத்தாறு ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மேற்கூறிய ஏழு பாரதிதாசன் நூல்களை முதலில் ஆங்கிலப்படுத்தியவரும் இவரே.
தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம், வரலாறு, மொழிபெயர்ப்பு ஆகியவை தொடர்பான ஏறத்தாழ நூறு ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். பயிற்சிப் பட்டறைகள் நடத்தியுள்ளார். பல்கலைக் கழகங்கள், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, சாகித்திய அகாடமி போன்றவற்றில் பல குழுக்குகளில் உறுப்பினராக இருந்துள்ளார்.
பெற்ற விருதுகள்
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் குடியரசுத் தலைவர் விருதாகிய தொல்காப்பியர் விருது (2015), தமிழக அரசின் பாரதிதாசன் விருது (2003), சிறந்த தமிழறிஞர் விருது (2003), நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது (2012), தமிழிசைச் சங்கத்தின் திரு. வி. க. விருது (2012), கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது (2013), கல்கத்தா தமிழ்ச்சங்கத்தின் சாதனைத் தமிழர் விருது (2014), எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம்: ஜி.யு.போப். மொழிபெயர்ப்பு விருது(2017) மற்றும் பல அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ளார்.
முப்பத்து நான்கு ஆண்டுகள் பல்வேறு கல்வி நிறுவனங்களில் தமிழாசிரியராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றி, 1996 இல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த செந்தமிழ்க் கல்லூரியின் முதல்வராகப் பணி ஓய்வுபெற்றார்.
விரைவில் சங்க நூல்கள் மொழிபெயர்ப்பு
தட்சின்ணாமூர்த்தியும் அவரின் மகள் ஈர நிலாவும் இணைந்து மொழிபெயர்த்துள்ள ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூல்களின் முழு ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் விரைவில் வெளியாக உள்ளன.