CM Stalin : மொழிதான் ஒரு இனத்தினுடைய இரத்த ஓட்டம். திணித்தால் ஏற்கமாட்டோம் என்பதே நம் மொழிக்கொள்கை! - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
CM Stalin : பிற மொழியைத் திணித்தால் அதை ஏற்கமாட்டோம் என்பதே நம்முடைய மொழிக் கொள்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழிசைச் சங்கத்தின் 80-ஆம் ஆண்டு இசை விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். விருதுகளையும் வழங்கினார்.
சென்னை இராஜா அண்ணாமலை அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் மு.க.ஸ்டாலினில் சிறப்புரையின் விவரம்:
தமிழிசைச் சங்கத்தின் விழாவில் 80-ஆம் ஆண்டு கலந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாட்டில் தமிழிசை கொடி கட்டிப் பறக்க காரணம் இருந்தது தமிழிசைச் சங்கம். இராஜா அண்ணாமலை மன்றம் கலைச் சின்னமாக நின்றுகொண்டிருக்கிறது; இசை சின்னமாக, தமிழின் அடையாளமாக திகழ்கிறது. தமிழிசையை கோட்டை கட்டி காத்த அரங்கம் இது.
பல நூற்றாண்டு காலமாக தமிழ் நிலபரப்பு பல்வேறு பண்பாட்டு படையெடுப்பு ஆளானது. அந்நிய ஆக்கிரமிப்பால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டது. அந்நியர் படையெடுப்பால் நம் இனம், உரிமையை இழந்தது. அந்நிய மொழி ஊடுறுவல் காரணத்தால் தமிழ் பாதிக்கப்பட்டது. அந்நியர் படையெடுப்பால் நம் இனம், உரிமையை இழந்தது. அந்நிய மொழி ஊடுறுவல் காரணத்தால் தமிழ் புறக்கணிக்கப்பட்டது.
ஆதிக்க வர்க்கத்தினரால் தமிழர் புறக்கணிக்கப்படனர். இப்படி தமிழர்கள், தமிழ் மொழி தாக்குதலுக்கு உள்ளானது.
தமிழ் மொழி காக்க திராவிடம் துணை நின்றது:
இந்தச் சூழலில் தமிழினத்தின் உரிமையைக் காக்க, திராவிட இயக்கம் எழுந்தது. தமிழ் மொழியைக் காக்க, மறைமலையடிகள் தலைமையில், தனித்தமிழ் இயக்கம் எழுந்தது. தமிழ்க் கலையைக் காக்க, இந்தத் தமிழ் இசைச் சங்கம் எழுந்தது.தனித்தமிழ் இயக்கமாக இருந்தாலும், தமிழிசை இயக்கமாக இருந்தாலும், அனைத்தையும் திராவிட இயக்கம் முழுமையாக ஆதரித்துப் போற்றியது.
தமிழ்நாட்டில், தமிழ் மேடைகளில், தமிழ்ப் பாட்டைப் பாடுவது, கேவலம் என்று நினைத்த ஒரு காலம் இருந்தது. தமிழில் பாடினால், மேடை தீட்டாகிவிடும் என்று நினைத்தார்கள். தமிழை நீசபாஷை என்று பழித்தார்கள். தமிழ்நாட்டில், தமிழ் மேடைகளில், தமிழில் பாட வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டி இருந்தது.
தமிழில் பாடச் சொல்லி, இசை மேடைகளில் திராவிட இயக்கத்தினர் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். இதனால் வேறு வழியில்லாமல், ஒரு பாட்டு பாடுவார்கள். அதற்கு 'துக்கடா' பாட்டு என்று பெயர். தமிழையே துக்கடா ஆக்கி வைத்திருந்தார்கள்.
"தமிழ் நீசபாஷையாக இருந்தால், தமிழன் கொடுக்கும் காசு நீசக்காசு ஆகாதா?" என்று கேட்டார் தந்தை பெரியார்.
1936-ஆம் ஆண்டு, 'பண்டைத் தமிழிசை' குறித்து யாழ்நூலை இயற்றிய விபுலானந்தர் அவர்கள், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையை, தந்தை பெரியார் தன்னுடைய 'விடுதலை' நாளிதழில் வெளியிட்டு பெருமைப்படுத்தினார். இதிலிருந்து இசை இயக்கம் என்பது அரசியல் முழக்கமாகவே மாறியது.
மகாகவி பாரதியார், தமிழ்த்தாத்தா உ.வே.சா., புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், மூதறிஞர் ராஜாஜி, கல்கி கிருஷ்ணமூர்த்தி, ரசிகமணி டி.கே.சி,* ஆர்.கே.சண்முகனார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இதனை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள்.
தமிழிசைச் சங்கம் :
இதில் மகத்தான பங்களிப்பைச் செய்தவர்தான், இந்த மன்றத்தின் வாசலில் கம்பீரமாக நிற்கிறார் அண்ணாமலை அரசர். தமிழிசைக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டார். அரசர் என்றால், தமிழிசையைக் காத்த அரசர் அவர். தமிழிசையை அந்த தமிழிசை மேடையைக் காத்த அரசர் அவர். பிறமொழி படையெடுப்பைத் தடுத்த அரசர் அவர்.
அரசர் அண்ணாமலை அவர்கள் தமிழ் இசைச் சங்கத்தைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, 1940-ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவின் போது 16 ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள்.
1943-ஆம் ஆண்டு தமிழிசைச் சங்கமாக அது உருவாக்கப்பட்டது. தமிழிசைச் சங்கத்திற்கு 1952-ஆம் ஆண்டு இந்த ராஜா அண்ணாமலை மன்றம் உருவானது. அதாவது நான் பிறப்பதற்கு முதலாண்டு, இன்றைக்கு நான் எண்பதாவது ஆண்டு விழாவில் வந்து பங்கெடுத்திருக்கிறேன்.
இந்தத் தமிழிசை இயக்கத்தில், ராஜா அண்ணாமலை அவர்களின் குடும்பத்தின் பங்களிப்பு யாராலும் மறக்க முடியாது, மறைக்கவும் முடியாது.
ராஜா அண்ணாமலையாரைப் போலவே, அவருடைய புதல்வர்களான ராஜா முத்தையா, எம்.ஏ.சிதம்பரம் ஆகியோர் இசைக்குத் தொண்டு ஆற்றினார்கள்.
இவர்களது வாரிசுகள், குடும்ப வாரிசுகளாக மட்டுமல்லாமல், இசை வாரிசுகளாகவும் செயல்பட்டார்கள். இம்மன்றத்தின் மதிப்புறு செயலாளராக இருக்கும் ஏ.சி.முத்தையா அவர்களும், தனது இசை வளர்க்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார். மரியாதைக்குரிய எம்.ஏ.எம்.ராமசாமி அவர்கள், தனது வாழ்நாள் முழுவதும், இசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஊக்குவித்து வந்தார்.
தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக வழங்கியவை மூன்று சொத்துகள்!
- கல்வி வளர்ச்சிக்காக உருவாக்கியது, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
- தொழில், நிதி நிர்வாகத்துக்காக உருவாக்கிய இந்தியன் வங்கி.
- இசைக்காகத் தமிழிசை மன்றங்கள்.
இவை மூன்றும் சிறந்த வாரிசுகளால் வளர்க்கப்பட்டு வருகிறது.
மொழி ஓர் இனத்தின் இரத்த ஓட்டம்:
சில நாட்களுக்கு முன்பு மியூசிக் அகாடமி ஹாலில் சொன்னதை இங்கே மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் ஆதல் வேண்டும். அந்த வரிசையில் இசையிலும் தமிழிசை செழிக்க வேண்டும். இது குறுகிய எண்ணம் கிடையாது. மொழி தான் ஒரு இனத்தினுடைய இரத்தஓட்டம். மொழி அழிந்தால், இனமும் அழிந்து போகும். எனவேதான் தமிழின் வளர்ச்சியும், தமிழனின் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. அதனால் பிறமொழி ஆதிக்கத்தை எதிர்ப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
பிறமொழி மீதான வெறுப்பு அல்ல:
ஒருவர் விரும்பினால் எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம். ஆனால் திணித்தால் அதை ஏற்கமாட்டோம் என்பதே நம்முடைய மொழிக் கொள்கை.
ஒரு மன்றம் அல்ல, இது போல பல மன்றங்கள் தோன்ற வேண்டும். இசை மன்றங்கள், கலை மன்றங்கள், தமிழ் மன்றங்கள் உருவாக வேண்டும். அதற்கு ஏ.சி.முத்தையா அவர்கள் தலைமையிலான தமிழிசை மன்றம் வழிகாட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.