TASMAC Sales: ஞாயிறு ஊரடங்கு.. சனிக்கிழமையே கடைக்கு படை எடுத்த மதுபிரியர்கள்: 217 கோடி ரூபாய்க்கு விற்பனை
ஞாயிறு ஊரடங்கு காரணமாக நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் மிகவும் அதிகமான அளவில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கியது. தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முழு மூச்சாக இறங்கியுள்ளது. இதன்காரணமாக தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது. அத்துடன் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக சனிக்கிழமையான நேற்று டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நேற்று அதிகரித்து காணப்பட்டது. நேற்று ஒரே நாளில் டாஸ்மாக கடைகளில் 217.96 கோடி ரூபாய் அளவிலான மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளன. இவற்றில் அதிகபட்சமாக சென்னையில் 50.04 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து மதுரையில் 43.20 கோடி ரூபாய்க்கும், திருச்சியில் 42.59 கோடி ரூபாய்க்கும் சேலம் 40.85 கோடி ரூபாய்க்கும் கோவையில் 41.28 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. முழு ஊரடங்கு காரணமாக நேற்று மதுபான கடைகளில் மது வாங்க பலரின் கூட்டம் அலைமோதியிருந்தது.
தமிழக அரசிற்கு முக்கிய வருவாய் தரும் கடையாக விளங்குவது டாஸ்மாக் மதுபானக் கடைகள். அந்தவகையில் தற்போது ஊரடங்கு காரணமாக ஒரே நாளில் 217.96 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் பொங்கல் பண்டிககைக்கும் மது விற்பனை கோடிக்கணக்கில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் தமிழ்நாடு அரசு மதுபான கடைகள் மூடல் தொடர்பான ஒரு அறிவிப்பை நேற்று முன் தினம் வெளியிட்டிருந்தது.
அதன்படி வரும் 15-ந் தேதி ( சனிக்கிழமை) பொங்கல் பண்டிககைக்கு அடுத்த நாள் திருவள்ளூர் தினம் என்பதால் அன்றைய தினம் மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 18-ந் தேதி வடலூர் வள்ளலார் நினைவு நாள் என்பதால் அன்றைய தினமும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஆண்டுதோறும் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுவதால் அன்றைய தினமும் மதுபானக் கடைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று தினங்கள் செயல்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ள இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, குடிமகன்கள் அதற்கு முந்தைய தினங்களிலே மதுபானக் கடைகளில் அலைமோதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பொங்கல் தினத்திற்கு அடுத்த நாள் திருவள்ளூர் தினத்தன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மதுபானக் கடைகளில் கடும் கூட்டம் மோதும் என்றும் எதிர்பாரக்கப்படுகிறது.
மேலும் படிக்க: படப்பை குணாவின் மனைவி எல்லம்மாளை கைது செய்தனர் தனிப்படை போலீசார்