தமிழ்நாட்டில் 18,449 பேர் பலி.. அதிர்ச்சி தரும் தகவல்...
சாலை விபத்து பட்டியலில் தமிழகம் முதலிடத்திலும் உயிரிழப்புகளில் இரண்டாம் இடத்திலும் உள்ளதாக அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது.

சென்னை: தமிழ்நாடு 2024 ஆம் ஆண்டில் நாட்டின் சாலை விபத்துகள் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளதுடன், உயிரிழப்புகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது, நிலையான சாலைப் பாதுகாப்புக் கொள்கை மற்றும் அமலாக்க நடவடிக்கைகளுக்கு இடையிலும் உள்ள சவாலை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.
அதிகரித்த விபத்துக்களின் எண்ணிக்கை
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் மூலம் மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, தமிழ்நாடு 2024 இல் 67,526 சாலை விபத்துகளைப் பதிவு செய்துள்ளது. இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் நடைபெற்ற சாலை விபத்துக்களின் எண்ணிக்கையானது மிக அதிகம் ஆகும்.
இந்த எண்ணிக்கை, 2023 இல் பதிவு செய்யப்பட்ட 67,213 விபத்துகளுடன் ஒப்பிடும்போது சற்று அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியான விபத்துக்களின் எண்ணிக்கையானது மேல்நோக்கிய இருந்து வருவதை குறிக்கிறது.
உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு
உயிரிழப்புகளைப் பொறுத்தவரை, தமிழ்நாடு 2024 இல் 18,449 உயிரிழப்புகளைப் பதிவு செய்து, விபத்துக்களின் போது 24,118 உயிரிழப்புகளைப் பதிவு செய்த உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
1.77 லட்சம் பேர் சாலை விபத்தால் உயிரிழப்பு
தேசிய அளவில், 2024 இல் சாலை விபத்துக்கள் 4.81 லட்சத்திலிருந்து 4.88 லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்புகள் 2023 இல் 1.73 லட்சத்திலிருந்து 1.77 லட்சமாக அதிகரித்துள்ளது. நாட்டிலுள்ள மொத்த சாலை விபத்து அறிக்கைகளில் தமிழ்நாடு மட்டும் கிட்டத்தட்ட 14 சதவிகிதப் பங்கைக் கொண்டுள்ளது.
விபத்திற்கான பிரதான காரணம்
இந்தத் தரவுகள் அதிவேகமே சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளுக்குத் தொடர்ந்து முக்கியக் காரணமாக உள்ளது என்பதைக் காட்டியுள்ளது. மாநிலத்தில் மொத்த விபத்துகள் (47,240 விபத்துக்கள்) மற்றும் உயிரிழப்புகளில் (12,240 உயிரிழப்புகள்) 70 சதவிகிதத்திற்கும் மேலாக அதிவேகத்தினால் ஏற்பட்ட விபத்துகள் பங்களிக்கின்றன. இது மாநிலத்தில் மொத்த உயிரிழப்புகளில் சுமார் 66 சதவிகிதம் ஆகும்.
சீட் பெல்ட், ஹெல்மெட் விழிப்புணர்வு
போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாதது உயிரிழப்புகளுக்குப் பெரும் பங்களித்துள்ளது: 2024 இல், தமிழ்நாடு ஹெல்மெட் அணியாததால் 7,744 உயிரிழப்புகளையும் , சீட் பெல்ட் அணியாததால் 469 உயிரிழப்புகளையும் பதிவு செய்துள்ளது.
சீட் பெல்ட் தொடர்பான உயிரிழப்புகள் கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாகக் குறைந்திருந்தாலும், ஹெல்மெட் தொடர்பான உயிரிழப்புகள் தொடர்ந்து உயர்ந்து, இரு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பில் உள்ள தொடர்ச்சியான இடைவெளிகளைப் பிரதிபலித்துள்ளது.
ஓட்டுநர் உரிமம் விபத்துகள் குறைவு
சரியான ஓட்டுநர் உரிமம் இல்லாத ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்ட விபத்துகள் கீழ்நோக்கிய சென்றுள்ளதை காட்டியுள்ளன.
தமிழ்நாடு 2024 இல் 4,017 விபத்துக்களைப் பதிவு செய்துள்ளது. இது 2023 இல் 4,733 ஆகவும், 2020 இல் 6,174 ஆகவும் இருந்தது. இது, அமலாக்கம் மற்றும் உரிமம் வழங்கும் நடைமுறைகளில் சில மேம்பாடுகளைக் குறிக்கிறது.
மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டம், 1988- ன் கீழ் விதிகளை வகுத்தாலும், அவற்றை அமல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளிடம் உள்ளது. மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம், மீறுபவர்களுக்கான அபராதங்களை அதிகரித்தல், சாலைப் பாதுகாப்புக் தணிக்கைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளுக்காக மின்னணு விரிவான விபத்து அறிக்கை (e-DAR) முறையைச் செயல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
விபத்துக்குறித்த இந்த புள்ளி விவரங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு மேலும் இதுபோன்ற விபத்துகள் மற்றும் அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பரவலாக கருத்துக்கள் எழுந்துள்ளன.






















