தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதலா..? வதந்தியை பரப்பியவருக்கு தக்க பதிலடி தந்த தமிழக டி.ஜி.பி..!
தமிழ்நாட்டில் இந்தி பேசும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி பரப்பிய நபருக்கு தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு தக்க பதிலடி தந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வட இந்தியாவைச் சேர்ந்த பலரும் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், வட இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் கோவையில் நீதிமன்றத்தின் முன்பு நடைபெற்ற கொலை வீடியோ மற்றும் மற்றொரு வீடியோவை பகிர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் தாக்கப்படுகிறார்கள். இந்தி பேசும் மக்கள் தாக்கப்படுகிறார்கள். பீகார் அரசு, உத்தரபிரதேச அரசு, ஜார்க்கண்ட் அரசு என அனைத்தும் அமைதியாக உள்ளன. இந்தி பேசும் மக்கள் மீதான இத்தகைய அடக்குமுறையை இந்தியாவில் இதற்கு முன் பார்த்ததில்லை. வாள்கள் மற்றும் ஏனைய ஆயுதங்களை கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
வதந்தி:
அவரது பதிவைக் கண்ட தமிழ்நாடு காவல்துறை இதுதொடர்பாக உடனடியாக விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில், “ தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் மற்றும் இந்தி பேசும் மக்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களிலும் பிற ஊடகங்களிலும் வதந்தி பரப்பப்படுகிறது. உண்மைகளை சரிபார்க்காமல் தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பதிவிட்டுள்ளனர்.
மேலும், முதலமைச்சர் நிதிஷ்குமாரையும், பீகார் போலீசையும் டேக் செய்து தமிழ்நாடு காவல்துறை சார்பில் ட்விட்டரில், “ இந்த ட்வீட் மிகவும் தவறானது. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். இல்லாவிட்டால் அவ்வாறு செய்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வீடியோவில் ஒன்று உண்மையில் தமிழ்நாட்டில் உள்ள பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள் இடையே நடைபெற்ற சண்டையின் சம்பவம். மற்றொன்று கோயம்புத்தூர் உள்ளூர்வாசிகள் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பானது ஆகும்.
சட்டம் ஒழுங்கு:
ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் காவல்துறையும் சட்டம் ஒழுங்கும் திறம்பட செயல்படுத்தப்படும் மிகவும் அமைதியான மற்றும் பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.”
இவ்வாறு தமிழ்நாடு காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Message from The Director General of Police / HoPF
— Tamil Nadu Police (@tnpoliceoffl) March 2, 2023
Tamil Nadu @bihar_police @NitishKumar https://t.co/cuzvY48sFk pic.twitter.com/vqKm4tANcx
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைவரான டி.ஜி.பி. சைலேந்திர பாபு வீடியோ வடிவில் அளித்துள்ள விளக்கத்திலும் பேசியிருப்பதாவது, “ நான் தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசுகிறேன். பீகாரில் உள்ள ஒருவர் தவறான தகவல் கொண்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் பீகாரில் இருந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமிழ்நாட்டில் தாக்கி வருகின்றனர் என்று 2 வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அந்த 2 வீடியோக்களுமே பொய்யான தகவல்களை கொண்ட வீடியோக்கள். இந்த 2 வீடியோக்களில் உள்ள சம்பவங்களும் திருப்பூரிலும், கோயம்புத்தூரிலும் நடைபெற்றது. இந்த இரண்டு சம்பவங்களிலும் தமிழ்நாடு மக்களுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் எந்த சண்டையும் நடைபெறவில்லை.
தவறான தகவல்கள்:
ஒரு சம்பவம் பீகாரில் இருந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மத்தியிலே நடைபெற்ற மோதல் சம்பவம். மற்றொன்று கோயம்புத்தூரில் உள்ள உள்ளூர்வாசிகள் இடையே நடைபெற்ற மோதல் சம்பவம் ஆகும். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். உண்மை என்னவென்றால், பீகாரில் இருந்து வந்துள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கு நன்றாகவும் கட்டுக்கோப்புடனும் தமிழ்நாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது.”
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.