Tamil Nadu NEET: நீட் பாதிப்பை ஆய்வுசெய்யும் ஏ.கே.ராஜன் குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம் : தமிழக அரசு நடவடிக்கை
நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்யும் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவிற்கு உறுப்பினர்களை தமிழக அரசு இன்று நியமித்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்த தேர்வால் அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாத அவல நிலை ஏற்பட்டது. நீட் தேர்வு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலினால் தமிழ்நாட்டில் இதுவரை 13-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவங்களாலும், தமிழக மாணவர்களின் நலன் கருதியில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டால் தமிழக மாணவர்கள் மருத்துவ கல்வியில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் தமிழகத்தில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. தவிர பெரும்பாலான கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.
தி.மு.க.வினர் தங்களது தேர்தல் அறிக்கையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உறுதியளித்து இருந்தனர். தற்போது கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், கடந்த 5 தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படும் என்று உத்தரவிட்டார். மேலும், இந்த குழுவில் கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த குழுவில் இடம் பெற உள்ள 9 நபர்கள் கொண்ட பட்டியல்களை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இந்த குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் செயல்படுவார். உறுப்பினர்களாக டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், டாக்டர் ஜவஹர் நேசன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், சட்டத்துறை அரசு செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர், மருத்துவ கல்வி இயக்ககத்தின் இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்பட உள்ளனர். மேலும், மருத்துவ கல்வி இயக்ககத்தின் கூடுதல் இயக்குனரும், தேர்வுக்குழு செயலாளரும் உறுப்பினராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு நுழைவுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக, நடப்பாண்டில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் உள்ளிட்ட தேர்வுகளை ரத்துசெய்ய வேண்டும் என்றும், 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலே மருத்துவ கல்வியில் சேர்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மேலும், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் பாதிப்பு குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஏ.கே..ராஜன் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தீர்ப்பை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : CM Stalin | திருச்சி, சேலம் மாவட்டங்களுக்கு 2 நாள் பயணம்: சந்திக்க வரவேண்டாம் : முதல்வர் கடிதம்