Kallakurichi Violence : கள்ளக்குறிச்சி: சூறையாடப்பட்ட பள்ளி - கொட்டும் மழையில் 108 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 108 பேர் கொட்டும் மழையின் நடுவே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 108 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். மழையையும் பொருட்படுத்தாமல் கைது செய்யப்பட்டவர்கள் மாவட்ட நீதிபதி முன்பு ஆஜராகினர். இதை தொடர்ந்து பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் நேற்று தாக்குதல் நடத்திய பள்ளியை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எ.வ.வேலு உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கில் கைதான 108 பேருக்கு ஆகஸ்ட் 1 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறார் சிறப்பு நீதிமன்றம், கள்ளக்குறிச்சி 2 ம் எண் நீதிபதி முன் 108 பேர் ஆஜரான நிலையில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு விடப்பட்டுள்ளது. 108 பேருக்கும் நீதிமன்ற காவலுக்கு பிறகு வேறு வேறு சிறைக்கு மாற்றப்படுவார்கள் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாவூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் நேற்று பள்ளி அருகே சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த நிலையில் போராட்டம் சிறிது நேரத்தில் வன்முறையாக மாறியது. காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சித்த நிலையில் பள்ளி மீது தாக்குதல் நடத்தினர். பள்ளியில் இருந்த பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய போராட்டகாரர்கள் பெஞ்ச் உள்ளிட்ட பொருட்களை தூக்கி சென்றனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர் நேற்று மாலை வன்முறை நடைபெற்ற இடங்களை உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டியும், காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவும் பார்வையிட்டனர். இதனிடையே தனியார் பள்ளியில் தாக்குதல் நடந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் இன்று முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் தெரிவித்த நிலையில், விதிகளை மீறி விடுமுறை விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் வன்முறை சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பாரபட்சமின்றி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் வன்முறை நடந்த பள்ளியை மீண்டும் சீரமைக்க குறைந்தது 2 மாதங்கள் ஆகும் என்பதால் அங்கு பயிலும் மாணவர்களின் நலன் கருதி அவர்கள் அருகிலுள்ள வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார்கள் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும் மாணவி மரணம் தொடர்பாக அரசியல் செய்யக்கூடாது என்றும், பெற்றோர் உணர்வை புரிந்து கொண்டு தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்