வளர்ச்சி மாநிலங்களில் தமிழகத்துக்கு முதலிடம் .. இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக் கணிப்பில் தகவல்
இந்தியாவில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று இந்தியா டுடே நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று இந்தியா டுடே நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் மாநிலங்களின் வளர்ச்சி தொடர்பாக ஆண்டுதோறும் தரவரிசைப் பட்டியலை இண்டியா டுடே நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மாநிலங்களில் 35,000 சதுர கிலோ மீட்டர்களையும், 5 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட மாநிலங்களை பெரிய மாநிலங்கள் என்றும், மற்றவைகளை சிறிய மாநிலங்கள் என்றும் வகைபப்டுத்தியுள்ளது.
பொருளாதாரம், கட்டமைப்பு, விவசாயம், சுகாதாரம், கல்வி, ஆட்சிமுறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, அனைவருக்குமான வளர்ச்சி, தொழில்தொடங்குதல், சுற்றுலா, சுற்றுச்சூழல் மற்றும் தூய்மை ஆகிய 12 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றிற்கு மதிப்பெண்கள் இட்டு அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் மாநிலங்கள் தரவரிசைபடுத்தப்பட்டுள்ளன. அதில், சிறப்பாக செயலாற்றிய பெரிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. சிறிய மாநிலங்கள் பட்டியலில் கோவா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
Tamil Nadu is ranked the best state again by India Today for 2022. TN has been top ranked since 2018. All states are evaluated on parameters like economy, education,health, governance etc..#TamilNadu 1️⃣🙌 pic.twitter.com/0Wq4VkrFpd
— Chennai Updates 2.0 (@UpdatesChennai2) December 16, 2022
கடந்த ஆண்டு தமிழ்நாடு நம்பர் ஒன் இடத்தைப் பெற்றபோது அதில் ஸ்டாலினுக்கு பாதி பெருமை தான் இருந்தது. ஆனால் இந்த ஆண்டும் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதற்கான முழு பெருமையும் ஸ்டாலினையே சாரும். மொத்தமுள்ள 12 பிரிவுகளில், 9 பிரிவுகளில் டாப் 5ற்குள் தமிழ்நாடு உள்ளது. பொருளாதாரத்தில் இரண்டாமிடத்திலும், உள் கட்டமைப்பு, நலம் மற்றும் சுகாதாரத்தில் 3ம் இடத்திலும், சட்டம் ஒழுங்கு, சுற்றுச்சூழல் மற்றும் கல்வியில் 4ம் இடத்திலும், தொழில்கள் தொடங்குவதில் 5வது இடத்திலும் உள்ளது என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
தமிழ்நாடு முதலிடத்தைப் பிடிக்க என்னென்ன முன்னெடுப்புகளை எடுத்துள்ளது என்பது பற்றியும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய தமிழ்நாட்டின் பொருளாதாரம் 300 பில்லியன் டாலர்களாக இருக்கும் நிலையில், ஆண்டுதோறும் இரண்டு இலக்க வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளது தமிழ்நாடு. இந்த இலக்கை எட்டுவதற்காகவும், அனைத்து திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் அரசுக்கு ஆலோசனை வழங்க, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ உள்ளிட்டோர் அடங்கிய பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது.
அதோடு, உலகத்தரத்திலான தொழிற்சாலை மற்றும் சரக்குகளை கையாளும் கட்டமைப்பு, சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை கன்னியா குமரி இடையே தொழிற்சாலை முனையங்களை அமைப்பது, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் க்ரீன் ஹைட்ரோஜன் ஆகியவற்றில் ஈடுபாடு காட்டுவது, ஆராய்ச்சி மற்றும் உருவாக்கத்தை ஊக்குவிப்பது, புதிய தொழில்கள் தொடக்கம் மற்றும் எதிர்காலத்துக்குத் தேவையான மனிதவளத்தை உருவாக்குவது ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது.
மாணவர்களின் திறனை வளர்ப்பதற்காக நான் முதல்வன் என்ற திட்டத்தினை திமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக பத்துலட்சம் இளைஞர்களின் திறனை வளர்த்து, அவர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்தும். இந்த திட்டத்தின் மூலமாக பயின்ற இளைஞர்கள், அரசு நடத்திய 1027 சிறிய மற்றும் பெரிய வேலை வாய்ப்பு முகாம்கள் மூலமாக 1,10,000 பேர் ஏற்கனவே வேலை வாய்ப்பை பெற்றுவிட்டனர். 5 புதிய தொழிற்சாலை முனையங்களை அமைக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் மேலும் 22000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு 207 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலமாக தமிழ்நாட்டிற்கு 2.23 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் கிடைக்கும். இந்த திட்டங்கள் மூலமாக 3,44,150 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் பல்வேறு முயற்சிகளால் EODB தரவரிசையில் கடந்த 2019ம் ஆண்டு 14வது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது.
தொழிற்சாலைகளில் கவனம் செலுத்தினாலும், விவசாயத்தையும் தமிழ்நாடு அரசு மறக்கவில்லை. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குகிறது. வீட்டுத்தோட்டம் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் 100 சதவீத மானியத்தில் தென்னை மரக்கன்று உள்பட பல்வேறு கன்றுகளை வழங்குகின்றது. அதுமட்டுமல்லாமல், சமூக முன்னேற்றத்திற்காக மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு பேருந்தில் இலவசப்பயணம், வகுப்பறைகளை மேம்படுத்த பேராசிரியர் அன்பழகன் திட்டத்திற்கு 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு, இன்னுயிர் காப்போம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது.
ஆனால் அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு, தொழில்தொடங்குதல், உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் சுணக்கம் கண்டுள்ளது அவற்றில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.