கட்டுப்படவில்லை என்றால் ஊரடங்கு தான் : ராதாகிருஷ்ணன் சூசகம்
ஊரடங்கு என்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் . கட்டுப்பாடுகள் கைகொடுக்காத பட்சத்தில் அரசு அதற்கான முடிவினை எடுக்கும் என தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து இயக்கக வளாகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் விழிப்புணர்வு ஆட்டோ வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கொரோனாவில் இருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, தடுப்பூசியை நாம் ஏன் போட்டுக்கொள்ள வேண்டும் போன்றவை குறித்து ஜிங்கில்ஸை (ஒலி வடிவிலான விழிப்புணர்வு விளம்பரங்கள் ) ஆட்டோ- வேன் களில் கட்டப்பட்ட ஒலி பெருக்கி மூலமும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களையும் மக்களுக்கு நேரடியாக விநியோகம் செய்தும், ஆடல் - பாடல் குழுவின் கலை நிகழ்ச்சிகள் மூலமும் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனாவால் வரும் இரண்டு வாரங்கள் சவாலான நாட்களாக பார்க்கப்படுகிறது. போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுவருகிறது" என்று தெரிவித்தார்.
மேலும், தமிழகம் முழுவதும் 54.85 லட்சம் தடுப்பூசி மருந்துகள் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இதில் 47.03லட்சம் கோவிசீல்ட் தடுப்பூசி மருந்து 7.82 லட்சம் கோவேக்சின் தடுப்பூசி மருந்து பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 40,99, 330 தடுப்பு ஊசிகள் இன்றைய தேதிவரை செலுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
ஊரடங்கு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "ஊரடங்கு என்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் . கட்டுப்பாடுகள் கைகொடுக்காத பட்சத்தில் அரசு அதற்கான முடிவினை எடுக்கும். தடுப்பூசிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை எதிர்கொள்ள இதுபோன்ற பிரச்சாரங்கள் உதவும்" என்றும் தெரிவித்தார்.
அடுத்த மூன்று நாட்களுக்கு நடைபெறும் கொரானா தடுப்பூசி திருவிழா தொடர்பான ஒலிபெருக்கி விழிப்புணர்வு ஆட்டோ வாகனங்கள் ஒலிபெருக்கி மூலம் 45 வயதிற்கு மேல் உள்ள 2.2 கோடி நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.