காவிரி: தமிழ்நாட்டிற்கே முழு உரிமை; முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
காவிரி விவகாரத்தில் நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு இருக்கிறோம் என்பதை கர்நாடக அரசுக்கு மட்டுமல்ல, ஒன்றிய அரசிற்கும் உணர்த்த வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் பேச்சு
காவிரி நதியின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு முன்னெடுத்து வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், ரவிக்குமார், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 13 சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது எனவும், தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மத்திய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று வழங்குவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,
தமிழ்நாட்டிற்கு காவிரி என்பது வாழ்வுரிமை ஆகும். நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு இருக்கிறோம் என்பதை கர்நாடக அரசுக்கு மட்டுமல்ல, மத்திய அரசிற்கும் உணர்த்த வேண்டும். வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் காவிரி பிரச்னையில் அனைவருக்கும் ஒன்றுபட்ட கருத்துதான் இருக்கும். காவிரியின் குறுக்கே நமது எல்லையில் இருந்து 4 கி.மீ தொலைவில் மேகதாது அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது.
இதனை நாம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து தடுத்தாக வேண்டும். மேகதாது அணை கட்டப்பட்டால் நமது விவசாயிகள் நலன் கடுமையாக பாதிக்கப்படும். மேகதாது அணையால் தமிழகத்திற்கு எந்த பிரச்னையும் இல்லை என்று கர்நாடக அரசு கூறிவருகிறது. இதில் துளியளவும் உண்மை இல்லை. வழக்கமான காலத்திலேயே நமக்கு தர வேண்டிய நீரை கர்நாடக அரசு தருவதில்லை, இந்த நிலையில் புதிய அணையை கட்டினால் தமிழகத்திற்கு வர வேண்டிய நீர்வரத்து குறையும்.
வெள்ள காலங்களில் நீரை தேக்கி வைக்காத சூழலில் உபரிநீரை மட்டுமே கர்நாடகா தருகிறது. இத்தகைய சூழலில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நீர் ஒதுக்கீட்டின்படி கர்நாடக தமிழகத்திற்கு நீரை வழங்குவதில்லை, உபரி நீரை மட்டும்தான் தமிழ்நாட்டிற்கு கர்நாடக வழங்கி வருகிறது. காவிரியின் குறுக்கே 67.16 டி.எம்.சி கொள்ளளவு உள்ள அணையை கட்டினால் நமது விவசாயிகள் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.
காவிரி என்பது கர்நாடகத்திற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கும் உரிமை உள்ளது. கர்நாடகாவை விட தமிழ்நாட்டில்தான் அதிக தூரம் காவிரி பாய்கிறது எனவே முழு உரிமை தமிழ்நாட்டிற்குதான் இருக்கிறது. இந்த உரிமையை சட்டப்பூர்வமாகவும் நாம் நிலைநாட்டி உள்ளோம் எனவும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.