"போர்னு வந்துட்டா இழப்புகள் இருக்கத்தான் செய்யும்" உணர்ச்சி பொங்க பேசிய தமிழக ஆளுநர் ரவி
ஆபரேஷன் சிந்தூரின்போது இந்தியா சந்தித்த சேதம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், இழப்பு ஏற்பட்டதை முதல்முறையாக ஒப்புக் கொண்டார்.

போர் என வந்துவிட்டால் இழப்பு ஏற்படத்தான் செய்யும் என்றும் அதைப்பற்றி கவலைப்படக் கூடாது என்றும் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். தேசிய கல்வி கொள்கை அவசியம் என்றும் அதனால் நாடு வேகமாக முன்னேறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உணர்ச்சி பொங்க பேசிய தமிழக ஆளுநர் ரவி:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரை பாராட்டும் விதமாக சென்னையில் பொது நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, "போர் என வந்துவிட்டால் இழப்பு ஏற்படத்தான் செய்யும். அதைப்பற்றி கவலைப்படக் கூடாது" என்றார்.
தொடர்ந்து பேசிய தமிழக ஆளுநர் ரவி, "சிந்தூர் நடவடிக்கை என்ற குறுகியகால மற்றும் துரிதமான ராணுவ நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு எதிராக பாரதம் பெற்ற தீர்க்கமான வெற்றியை பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் அரசு ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற நிலையை இந்தியா வெளிப்படுத்தியது.
"போர்னு வந்துட்டா இழப்புகள் இருக்கத்தான் செய்யும்"
பாகிஸ்தானை வெளிப்படையாகத் தண்டித்தது. நாட்டின் உள்நாட்டு ராணுவத் திறன்களை பறைசாற்றியது, ஆயுதப் படைகளின் வீரம் மற்றும் நமது தேசியத் தலைமை மற்றும் ஆயுதப் படைகள் மீது ஒவ்வோர் இந்தியரும் கொண்டுள்ள கூட்டு நம்பிக்கையை வெளிப்படுத்தியது.
பல தசாப்த அடக்குமுறைகளிலிருந்து விடுபட்ட போதும், பாகிஸ்தானின் தொடர்ச்சியான தவறான செயல்களுக்கு போதுமான வகையில் எதிர்வினையாற்றாதது மற்றும் முடிவெடுக்க இயலாதது போன்ற நிலைகளுக்கு மாறாக பிரதமர் மோடியின் தலைமையில் நாடு ஒரு தீர்க்கமான மாற்றம் கண்டு, ராணுவ வலிமை மற்றும் ராஜீய செல்வாக்கு உள்ளிட்ட தனது தேசிய வளங்களை தேச நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்துவதற்கான தெளிவு, துணிச்சல், உறுதிப்பாடு, அரசியல் விருப்பம் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்டது" என்றார்.
ஆபரேஷன் சிந்தூரின்போது இந்தியா சந்தித்த சேதம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், இழப்பு ஏற்பட்டதை முதல்முறையாக ஒப்புக் கொண்டார். இந்த சூழலில், தமிழக ஆளுநரின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.




















