"வளர்ந்த நாடுகளுக்கு பொறாமையையும் வளரும் நாடுகளுக்கு உத்வேகத்தையும் அளிக்கிறது" தமிழக ஆளுநர் ரவி பேச்சு!
மோடியின் தொலைநோக்கு மற்றும் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், பாரதம் விளிம்பிலிருந்து உலக விவகாரங்களின் மைய நிலைக்கு நகர்ந்துள்ளது என சுதந்திர தின உரையில் தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் 78ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், மக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி இன்று உரையாற்றியுள்ளார்.
நாட்டின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, வளர்ந்த நாடுகளுக்கு பொறாமையையும் வளரும் நாடுகளுக்கு உத்வேகத்தையும் அளிக்கிறது என ஆளுநர் தெரிவித்துள்ளார். கடந்த 10ஆண்டுகளில் இந்தியா அடைந்த முன்னேற்றம் குறித்து பேசிய அவர், "நீண்ட, நெடிய காலனித்துவ சுரண்டலுக்கு மத்தியில் பாரதம் சுதந்திரமடைந்தபோது, நாம் உலகின் 6வது பெரிய பொருளாதாரமாக இருந்தோம்.
"முன்னெப்போதுமில்லாத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது" துரதிருஷ்டவசமாக, ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக, நாம் 11ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டோம். ஒப்பீட்டளவில் மிகவும் ஏழ்மையானோம். நமக்குப் பின்னால் இருந்த நாடுகள், நம்மை மிகவும் பின்னுக்குத் தள்ளின.
இன்று பாரதம் உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக உள்ளது. உலக பொருளாதாரத்தில் 11ஆவது இடத்தில் இருந்து 5ஆவது இடத்துக்கு நாம் உயர்ந்துள்ளோம், விரைவில் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறத் தயாராகி விட்டோம். கடந்த ஒரு தசாப்தத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு மற்றும் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், பாரதம் விளிம்பிலிருந்து உலக விவகாரங்களின் மைய நிலைக்கு நகர்ந்துள்ளது.
நமது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, வளர்ந்த நாடுகளுக்கு பொறாமையையும் வளரும் நாடுகளுக்கு உத்வேகத்தையும் அளிக்கிறது. கணக்கில் கொள்ளப்படாத நிலையில் இருந்த நமது நாடு, இன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் உலகின் முதல் சில நாடுகளில் ஒன்றாக உள்ளது;
நாம் உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்-அப் சூழல் நிறைந்த நாடாக இருக்கிறோம்; கடந்த ஒரு தசாப்தத்தில் 25 கோடிக்கும் அதிகமான வறியநிலை மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். நமது டிஜிட்டல் வசதி உள்கட்டமைப்புகள், உலகத்தரம் வாய்ந்த நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் அல்லது மேம்படுத்தப்பட்ட மின்னுற்பத்தி நிலையங்கள் என எதுவாக இருந்தாலும் அவற்றில் முன்னெப்போதுமில்லாத வளர்ச்சி உள்ளது.
தமிழக ஆளுநரின் சுதந்திர தின உரை: நமது உள்கட்டமைப்பு நிலப்பரப்பு அதிவேகமாக சிறப்பானதாக மாறி வருகிறது. ஒரு காலத்தில் பலவீனமாக இருந்த நமது வங்கிச்சேவை மற்றும் நிதித்துறை இன்று உலகிலேயே மிகவும் வலுவானதாக உள்ளது. ஆயுதப் படைகள் நமது தேசத்தைப் பாதுகாக்க போதிய தகுதியுடன் உள்ளன. பாதுகாப்புத்துறையில் நமது சுயசார்புக்காக மிகப்பெரிய பங்களிப்பை தனியார் துறை வழங்கி வருகிறது.
நமது பாரதம் முதல் முறையாக பல நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறது. நமது பாதுகாப்பு ஏற்றுமதி, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. திறன் மேம்பாட்டு மையங்களின் மிகப்பெரிய விரிவாக்கம், நிதிக்கான எளிதான அணுகல் ஆகியவை நமது மக்களில் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களில் அதிலும் கிராமப்புற பெண்களின் மறைந்திருக்கும் படைப்பாற்றல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளன.
ஒவ்வொரு வீட்டுக்கும் சமையல் எரிவாயு மற்றும் குடிநீருக்கான அணுகல், நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளது. கிராமங்களில் வாழும் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் தங்களுக்கென சொந்த வங்கிக் கணக்குகளையும் சொந்த வீ'ட்டுரிமையையும் பெற்று நிதி ரீதியாக அதிகாரம் அளிக்கப்பட்டவர்களாகி உள்ளனர்.
சுகாதார உள்கட்டமைப்பு, சுகாதார சேவைகள் மற்றும் ஆயுஷ்மான் பாரத் போன்ற உடல் ஆரோக்கியம் தொடர்பான நலத்திட்டங்களில் மிகப்பெரிய விரிவாக்கம், முன்னேற்றம் ஆகியவை நமது வறியநிலை மக்களுக்குப் பெரிதும் உதவியுள்ளதுடன் மருத்துவமனை மற்றும் சுகாதார செலவுகளின் சுமையிலிருந்து அவர்களை காப்பாற்றியுள்ளது.
நாடு முழுவதும் பரவியுள்ள பத்தாயிரத்துக்கும் அதிகமான ஜன-ஒளஷதி மையங்கள் எனப்படும் குறைந்த விலை மக்கள் மருந்தகங்கள், தரமான மருந்துகளை மிகவும் மலிவாகவும் வறியநிலை மக்களுக்கு மிகவும் உகந்ததாகவும் ஆக்கியுள்ளன. நமது கர்ப்பிணி தாய்மார்களின் ஊட்டச்சத்து மற்றும் மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பிந்தைய பராமரிப்பு ஆகியவை மீது செலுத்தப்பட்ட சிறப்பு கவனம் காரணமாக பிரசவகால தாய் - சேய் மரணங்கள் கணிசமாகக் குறைத்துள்ளன" என்றார்.