வெளிநாட்டில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை விரைந்து மீட்க நடவடிக்கை... தமிழ்நாடு அரசு உறுதி!
வெளிநாடுகளில் உயிரிழந்த 2 தமிழர்களின் உடல்களை எடுத்து வருவதற்கான செலவை இந்தியத் தூதரகமும் தமிழ் சங்கங்களும் ஏற்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டில் உயிரிழந்த இரண்டு தமிழர்களின் உடல்களை விரைந்து மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த 2 தமிழர்களின் உடல்களை எடுத்து வருவதற்கான செலவை இந்தியத் தூதரகமும் தமிழ் சங்கங்களும் ஏற்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியான விடுமுறைகள் காரணமாக உடல்களைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் முன்னதாக வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை விளக்கமளித்துள்ளது. முன்னதாக திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடியைச் சேர்ந்த முத்துக்குமரன் (வயது 40) என்பவர் குவைத் சென்று ஒரு வார காலத்தில் உயிரிழந்தார்.
கடந்த மூன்றாம் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து தொலைபேசியில் குடும்பத்தை தொடர்பு கொண்ட முத்துக்குமரன் வேலை கஷ்டமாக உள்ளதாக மனைவி வித்தியாவிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் குவைத்தில் வேலைக்குச் சென்ற முத்துக்குமரன் இறந்து விட்டதாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் லெட்சுமாங்குடியில் உள்ள அவரது உறவினர்களுக்கு குவைத் நாட்டில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னதாக முத்துக்குமரனின் சாவில் மர்மம் இருப்பதாக அவர்களுடைய உறவினர்களும் அவருடைய மனைவி வித்தியாவும் புகார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் குவைத் சென்ற திருச்சி வடக்கு சித்தாம்பூர் காவேரி பாளையத்தைச் சேர்ந்த சின்னமுத்து புரவியான் (வயது 52) உயிரிழந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக சின்னமுத்து வெளிநாடான சவுதியில் வெல்டர் வேலைக்காக சென்றவர் கடந்த புதன்கிழமை இரவு அன்று சின்னமுத்து தனது மனைவி அன்னக்கிளி மற்றும் மகளிடம் சவுதியில் இருந்து அலைபேசி மூலம் பேசியுள்ளார். அடுத்த நாள் மனைவி அன்னக்கிளி தனது கணவரிடம் பேச முற்பட்டபோது செல்போன் சுவிட்ச் ஆப்பாகி இருந்தது. அவரது நண்பரிடம் கேட்ட பொழுது உங்களின் கணவர் சவுதியில் காணாமல் போய் விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதியம் சவுதி யிலிருந்து பேசிய சின்னமுத்துவின் நண்பர் உங்களின் கணவர் சின்னமுத்து சிகிச்சைக்காக அனுமதித்திருப்பதாக கூறினர். பிறகு மீண்டும் தொடர்பு கொண்டு கணவர் சின்னமுத்து இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். தனது கணவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். உரிய விசாரணை நடத்தி தனது கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி அவரது மனைவி அன்னக்கிளி மற்றும் மகள் நிவேதா ஆகியோர் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.