GIM: சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு - தொடங்கியது இரண்டாம் நாள் அமர்வு
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டாம் நாள் மாநாடு இன்று தொடங்கியது. இதில் பல்வேறு அரங்குகளில் வெவ்வேறு தலைப்புகளில் குழு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கிய நிலையில், இரண்டாம் நாளான இன்று அமர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 3ஆவது முறையாக உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று (டிச.7) காலை தொடங்கியது. விழாவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மத்திய தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை, தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை, தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை, தமிழ்நாடு தரவு மையக் கொள்கை, தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை, தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கை, தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை, செயற்கை மணல் (M-Sand) உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கை, தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை, தமிழ்நாடு எத்தனால் கொள்கை, தமிழ்நாடு நகர எரிவாயு விநியோகக் கொள்கை, தமிழ்நாடு சரக்கு போக்குவர்த்துக் கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து திட்டம், தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து செயற்கை இழை நூல், மற்றும் செயற்கை இழை துணி மற்றும் ஆடை தயாரிப்புகளுக்கான சிறப்பு திட்டம், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை திட்டம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை, தமிழ்நாடு சுற்றுலா கொள்கை, தென்னை நார் கொள்கை எனப் பல்வேறு கொள்கைகள் வெளியிடப்பட்டன.
முதல் நாளிலேயே எட்டப்பட்ட இலக்கு
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.5.5 லட்சம் கோடி என்ற இலக்கு முதல் நாளிலேயே எட்டப்பட்டதாக தொழில்துறைச் செயலர் அருண் ராய் தெரிவித்தார். முதல் நாளிலேயே 100-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும் அருண் ராய் தெரிவித்தார்.
இந்த நிலையில், இரண்டாம் நாள் மாநாடு இன்று (ஜன.8) காலை 10 மணிக்குத் தொடங்கியது. இதில் பல்வேறு அரங்குகளில் வெவ்வேறு தலைப்புகளில் குழு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இவை தவிர நாள் முழுவதும் கண்காட்சிகள் நடைபெற உள்ளன. அத்துடன் வணிக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு பங்கேற்பு
ஓர் அரங்கில் 'சுழற்சி பொருளாதாரம் மூலம் காலநிலை மாற்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' என்ற தலைப்பில் குழு விவாதம் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு கலந்துகொண்டுள்ளார்.