Poor Rice Quality : தரமற்ற அரிசியை வழங்கியதா தமிழ்நாடு? மத்திய அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு...திமுக அரசு பதிலடி
மத்திய அமைச்சர் கோயல், உணவுத்துறையின் இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே மற்றும் மத்திய உணவுத் துறை செயலர் சுதன்ஷு பாண்டே ஆகியோர் தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தைப் பாராட்டி இருந்தனர்.
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடையே எடுத்து செல்லும் வகையில் சென்னையில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பேசிய மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பரபரப்பு குற்றச்சாட்டை ஒன்றை சுமத்தியுள்ளார்.
அதாவது, தமிழ்நாட்டில் வழங்கப்படும் அரிசி தரமற்ற முறையில் இருப்பதாக அவர் சாடியுள்ளார். பாஜக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தரமான அரிசியை கொள்முதல் செய்து அனுப்பினாலும், மாநில அரசு தரமற்ற அரிசியை (பொது விநியோகத் திட்டத்தின் மூலம்) விநியோகம் செய்கிறது என்று எனக்கு இப்போதுதான் கூறப்பட்டது.
தமிழ்நாடு மக்கள் மோடியை விரும்பத் தொடங்குவார்கள் என்ற அச்சத்தில் மத்திய அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தினாலும், அவை மக்களிடம் சென்றடைவதைத் தடுக்க மாநில அரசு விரும்புகிறது. அவர்கள் மிகவும் பயப்படுகிறார்கள். எந்தத் திட்டத்திலும் பிரதமரின் படத்தைக் கூட அனுமதிக்க மாட்டார்கள்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மோடி தனிப்பட்ட முறையில் வளமான, வளர்ச்சியடைந்த, ஊழலற்ற தமிழ்நாட்டை காண விரும்பினார். ஆனால், இந்த ஆட்சியில் இருந்து இதை எதிர்பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்கள் பிரதமரை மோசமான வார்த்தைகளால் விமர்சிக்கின்றனர்" என்றார்.
இந்த குற்றச்சாட்டை சுமத்திய ஒரு சில மணி நேரங்களிலேயே தமிழ்நாடு அரசு அதற்கு எதிர்வினையாற்றியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, "மத்திய அமைச்சர் அரசியல் நோக்கம் கொண்டு பேசுகிறார்" என பதில் அளித்துள்ளார்.
வரும் மாதங்களில், 50 மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கூறியதைக் குறிப்பிட்டு பேசிய அமைச்சர் சக்கரபாணி, “நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. இதை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார்கள். ரேஷன் கடைகளுக்கு நிலையங்களுக்கு கோயல் செல்லவில்லை.
ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த கடைகள் மூடப்பட்டுள்ளன. அதை பார்ப்பதற்காக அவர் எங்கும் செல்லவில்லை. கட்சிக்காரர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார். அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துகிறார்கள். அவரை இப்படி பேச வைக்கிறார்கள். இது மிகவும் வருத்தத்திற்குரியது.
சில மாதங்களுக்கு முன்புதான், மத்திய அமைச்சர் கோயல், உணவுத்துறையின் இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே மற்றும் மத்திய உணவுத் துறை செயலர் சுதன்ஷு பாண்டே ஆகியோர் தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தைப் பாராட்டி இருந்தனர்.
ஜூன் மாதம் கோவைக்கு வந்திருந்த கோயல், தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கான பிரத்யேக வடிவமைப்பை வழங்குமாறு தமிழ்நாடு அரசுக்கு அழைப்பு விடுத்திருந்தார். மேலும், ஜூலை 5ஆம் தேதி, டெல்லியில் அனைத்து மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் கூட்டத்தின் போது அத்தகைய விளக்கக்காட்சி தமிழ்நாடு அரசு சார்பில் அளிக்கப்பட்டது.
செப்டம்பர் 27 அன்று சௌபே, சென்னை வந்திருந்தபோதும் அக்டோபர் முதல் வாரத்தில் மதுரை, தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாண்டே வந்திருந்தபோதும் மாநிலத்தில் பொது விநியோகத் திட்டத்தைப் பாராட்டி பேசினர்" என்றார்.