யாருமே இல்லாத கிராமத்தில் வாழும் இணையருக்கு புதிய வீட்டுமனை பட்டா..! என்ன நடந்துச்சு?
விருதுநகர் மாவட்டத்தில் 10 ஆண்டுகளாக யாருமே இல்லாத கிராமத்தில் தனியாக வசித்து வந்த தம்பதியினருக்கு மாவட்ட ஆட்சியர் புதிய வீட்டுமனைப் பட்டா வழங்கியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி தொகுதியில் அமைந்துள்ளது குச்சம்பட்டி என்ற கிராமம். மாவட்டத்தின் மற்ற கிராமங்களைப் போலவே இந்த கிராமத்திலும் பொதுமக்கள் வாழ்ந்து வந்தனர். ஆனால், காலப்போக்கில் வேலையின்மை, கல்வி வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த ஊர் மக்கள் பிற ஊர்களுக்கு குடிபெயர்ந்து விட்டனர். ஆனால், அந்த ஊர் மக்களின் சொந்த வீடுகள் மட்டுமே அதே ஊரில் இருந்தது.
முறையான பராமரிப்பும், ஆள் நடமாட்டமும் இல்லாத காரணத்தால் இந்த ஊர் ஆள் அரவமே இன்றி பாழடைந்த நிலையில் இருக்கிறது. ஆனால், இந்த ஊரில் 77 வயதான சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் 66 வயதான தனது மனைவி சீதாலட்சுமியுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஊரில் இவர்கள் இருவரும் யாருடைய துணையின்றி தனியாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள். மூன்று பேரும் திருமணம் ஆகி தற்போது தனியாக வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். சித்தவைத்தியரான சுபாஷ் சந்திரபோசே இந்த ஊரின் தலைவராகவும் உள்ளார். இந்த ஊரில் உள்ள கோயில் திருவிழாவின்போது மட்டும் ஊர் பொதுமக்கள் அனைவரும் வெளியூர்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு வருகின்றனர். அவ்வாறு வருபவர்களும் திருவிழா முடிந்தவுடன் உடனே வெளியூர்களுக்கு சென்று விடுகின்றனர்.
சுபாஷ் சந்திரபோஸ் சித்த வைத்தியர் என்பதால் வாரத்திற்கு குறைந்தது 10 பேர் அளவுக்கு இவரிடம் சித்த வைத்தியத்திற்காக மட்டும் வந்து செல்கின்றனர். இவர் பாம்புக்கடி உள்ளிட்ட சிலவற்றிற்கு வைத்தியம் பார்த்து வருகிறார். இவர்கள் இருவர் மட்டுமே இந்த கிராமத்தில் வசித்து வந்தாலும் இவரின் வீட்டில் மின்விநியோகம் உள்ளது. மேலும், சுபாஷ் சந்திரபோசும் அவசரத் தேவைகளுக்காக செல்ஃபோனையும் பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில், இவர்களது நிலை தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது.
இதையடுத்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வயதான தம்பதியினர் இருவருக்கும் இலவச வீட்டு மனை பட்டாவை வழங்கியுள்ளார். இந்த வீட்டுமனையில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் ரூபாய் 2.47 லட்சம் மதிப்பிலான வீடு வரும் 4 மாதங்களுக்குள் கட்டப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். 35 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் ஜமீன்தார் பரம்பரையாக இந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே, அனைவரும் ஊரை விட்டு வெளியேறிவிட்ட நிலையிலும் தம்பதியினர் மட்டும் இதே கிராமத்தில் வசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : வைட்டமின் பி 12 - வேகன் உணவு பின்பற்றுபவரா...? கவனம் தேவை!