"மருத்துவமனைகளில் கூடுதல் பாதுகாப்பு" அதிரடி காட்டும் டிஜிபி சங்கர் ஜிவால்!
மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம்:
சென்னை கிண்டியில் இயங்கி வருகிறது கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு தலைவராக பணியாற்றி வருபவர் மூத்த மருத்துவர் பாலாஜி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் மகன் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை நேற்று சரமாரியாக குத்தினார்.
மாநிலத்தின் தலைநகரான சென்னையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை மருத்துவமனை ஊழியர்களே மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த விவகாரத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பால் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிரடி காட்டிய டிஜிபி:
இதையடுத்து, அரசு மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர், காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில், இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மருத்துவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ட
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் போடப்பட்டுள்ளது. இரவு நேர பாதுகாப்பையயும் அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிக்க: TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!