TN Corona Relief: முதல்வர் படம் இருக்கலாம், ஆனால் உதயசூரியன் இருக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
"தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் படம் ரேஷன் கடைகளில் இடம் பெறுவதில் தவறில்லை, ஆனால் ஆளுங்கட்சி சின்னத்தை பயன்படுத்தக்கூடாது" என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதார்களுக்கு நிவாரண உதவி வழங்கும்போது அரசு மட்டுமே முன்னிலை படுத்தப்பட வேண்டுமே தவிர, ஆளுங்கட்சியை முன்னிலைப்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 இரண்டு தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த அதிமுக உறுப்பினர் தேவராஜ் என்பவர் ரேஷன் கடைகளில் திமுக முன்னிலைப்படுத்த படுவதாக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த ஜனவரி மாதம் முந்தைய அதிமுக அரசு நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கிய போது, அதற்கான டோக்கன்களை அரசியல் கட்சியினர் வழங்க கூடாது எனவும், நியாய விலை கடைகளில் கட்சி சார்பில் பதாகை வைக்க கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை மீறும் வகையில் தற்போது கொரோனா நிவாரண நிதி 2,000 ரூபாய் வழங்கும் நிகழ்வுகளில் திமுகவினர் ஈடுபடுவதாக தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் நியாயவிலை கடைகளுக்கு அருகாமையில் சாலையோரம் திமுகவினர் பேனர்கள் வைத்துள்ளனர், அதற்கு தடை விதிக்க வேண்டும். அரசு நிதியுதவி வழங்கும் நிகழ்வு ஆளும் கட்சியின் தலையீடு இல்லாமல் நடைபெற வேண்டும் உள்ளிட்ட விஷயங்களை குறிப்பிட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. அப்போது நிவாரான உதவி வழங்கப்படும் ரேஷன் கடைகளின் முன்னிலையில் உதய சூரியன் சின்னம் இடம் பெற்றுள்ளதாகவும், முதல்வரின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் விவாதிடப்பட்டது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், தேர்தல் அறிவிக்கப்பட இருந்த நேரத்தில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டதால், அங்கு அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெறக் கூடாது எனவும், பேனர்கள் வைக்க கூடாது எனவும் வழக்கு தொடரப்பட்டதாகவும், தற்போதைய நிலையும், அப்போதைய நிலைமையும் வெவ்வேறு என சுட்டிக்காட்டி தனது வாதத்தை முன்வைத்தார்.
இரண்டு தரப்பையும் விசாரித்த நீதிபதிகள் "நிவாரண உதவி வழங்கும் போது, அரசு மட்டுமே முன்னிலை படுத்தப்பட்டிருக்க வேண்டுமே தவிர, ஆளுங்கட்சியை முன்னிலைப்படுத்தக் கூடாது" என்று உத்தரவிட்டனர். மேலும் தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் என்ற முறையில் "முதல்வர் படம் ரேஷன் கடைகளில் இடம் பெறுவதில் தவறில்லை ஆனால் ஆளுங்கட்சி சின்னத்தை ரேஷன் கடைகளில் பயன்படுத்த கூடாது" எனவும் உத்தரவிட்டனர். நிவாரணம் வழங்குபவர்கள், இந்நிகழ்ச்சியை அரசியல் நிகழ்வாக மாற்ற நினைக்கக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், நிவாரண உதவிகள் வழங்கும்போது கொரோனா தடுப்பு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.