இந்தியாவிலேயே முதல் முறை.. கடல் நடுவே கண்ணாடிப் பாலம்.. கொண்டாட்டத்தில் குமரி!
குமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையையும் விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடிப் பாலம் நாளை திறக்கப்பட உள்ளது.
கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு வள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா:
திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் புகழ் சேர்த்திடும் வகையில், முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் திருவள்ளுவர் சிலையை தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, கடந்த 2000ஆம் ஆண்டு திறந்து வைத்தார்.
கடல் நடுவே உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலையைக் காண உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதன் வெள்ளி விழாவை கொண்டாட உள்ளது தமிழக அரசு.
கொண்டாட்டத்திற்கு தயாரான குமரி:
கன்னியாகுமரியில் வெள்ளிவிழாவினை டிசம்பர் 30, 31, மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் சிறப்போடு நடைபெறவிருக்கிறது.
வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கும் அருகேயுள்ள விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ள பாறைக்கும் இடையே கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டு நாளை திறக்கப்பட உள்ளது.
இதனை, தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார். கடல் நடுவே கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டிருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை.
இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "காலத்தால் அழியாத காவியமாக நிலைப்பெற்றுவிட்ட திருவள்ளுவர் சிலைக்கு, கருணாநிதி இந்தியாவின் தென் எல்லையில் நிறுவிய தமிழ்ப்பண்பாட்டு அடையாளத்துக்கு இது வெள்ளி விழா ஆண்டு.
கால் நூற்றாண்டு காலத்தை கடந்து, இன்னும் பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கவிருக்கும் சிலைக்கு, பேரறிவுச் சிலை (Statue of Wisdom) எனப் பெயர் சூட்டி விழா எடுத்து மகிழ்கிறது உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைந்துள்ள நம் திமுக அரசு.
திராவிட இயக்கம் எப்போதும் திருக்குறளையும் திருவள்ளுவரையும் போற்றி வருகிறது. பொதுவாழ்வுக்கும் தனி வாழ்க்கைக்கும் துணை நிற்கும் திருக்குறளை வழங்கிய திருவள்ளுவரை இளந்தலைமுறைத் தமிழர்களும் போற்றிடும் வகையில் பேரறிவுச் சிலையின் வெள்ளிவிழா கன்னியாகுமரியில் டிசம்பர் 30, 31, மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் சிறப்போடு நடைபெறவிருக்கிறது.
வெள்ளிவிழாவின் அடையாளமாக வள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கும் அருகேயுள்ள விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ள பாறைக்கும் இடையே கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டு திறக்கப்படுகிறது. கடல் நடுவே கண்ணாடிப் பாலம் என்பது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: TN Rain: வீட்டைவிட்டு வெளியே வராதீங்க.! இன்று இரவு 12 மாவட்டங்களில் மழை இருக்கு- வானிலை மையம்