"திராவிடர் கழகம் உருவாக்குவதற்கான அடித்தளம் அமைத்தவர் ஆசைத்தம்பி" முதலமைச்சர் ஸ்டாலின் புகழ் அஞ்சலி
திராவிட இயக்கத்தவர்களுக்கு உணர்வூட்டிய படைப்புக்களை படைத்தவர் ஆசைத்தம்பி என திமுக தலைவர் ஸ்டாலின் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.வி.பி. ஆசைத்தம்பியின் நூற்றாண்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின், "ஒருகாலம் வரும்… சட்டமன்ற உறுப்பினராக ஆவோம்; நாடாளுமன்ற உறுப்பினராக ஆவோம்…’ என்றெல்லாம் யாரும் கணக்குப் போடாத காலத்தில், திராவிட இயக்கத் தூணாக தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் ஆசைத்தம்பி.
"திராவிட இயக்கத்தவர்களுக்கு உணர்வூட்டிய படைப்புக்களை படைத்தவர்"
பள்ளிப்பருவ காலத்திலேயே திராவிட இயக்க மாணவர்களை இணைத்து சங்கம் தொடங்கி பல்வேறு அமைப்புகளைத் உருவாக்கி, மேடைகளில் சொற்பொழிவாற்றத் தொடங்கினார் ஆசைத்தம்பி. காந்தியார் சாந்தியடைய... போன்ற பல்வேறு கட்டுரைகளை அவர் அந்தக் காலக்கட்டத்தில் எழுதி திராவிட இயக்கத்தவர்களுக்கு உணர்வூட்டிய படைப்புக்களை படைத்திருக்கிறார் ஆசைத்தம்பி.
குறிப்பாக ‘காந்தியார் சாந்தியடைய’ என்ற புத்தகம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணல் காந்தியடிகள் கொலை செய்யப்பட்ட வேதனையில் எழுதப்பட்ட மிகச்சிறிய புத்தகம் அது. கோட்சே என்ற கொடியவனை - மனதில் இருக்கும் மதவாதத்தைக் கண்டித்து அந்த நூல் எழுதப்பட்டது. இந்த புத்தகம் வகுப்புவாதத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்லி அந்த நூலை அன்றைய அரசு தடை செய்தது.
மொத்தம் 24 முறை, இனம் –மொழி –நாடு காக்கப்போராடி சிறை சென்றவர் நம்முடைய ஆசைத்தம்பி. எப்போதுமே தனது மனதில் பட்டதை அப்படியே யாருக்கும் பயப்படாமல், வெளிப்படையாக எடுத்துச் சொல்லக்கூடிய ஆற்றல் பேசுபவர்தான் ஆசைத்தம்பிக்கு உண்டு. இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால், அன்றைய நீதிக்கட்சித் தலைவர்களின் நடவடிக்கைகள் சரியாக இல்லை என்பதையும் மேடைகளில் பேசி இருக்கிறார்.
"ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு, ஆசைத்தம்பி"
பேரறிஞர் அண்ணாவின் 'திராவிட நாடு' இதழில் 'ஜஸ்டிஸ் கட்சிக்கு புதிய அமைப்பு வேண்டும்' என்று 1943-ஆம் ஆண்டு கட்டுரை தீட்டியவரும் ஆசைத்தம்பி. இதை வைத்துப் பார்த்தால் 'திராவிடர் கழகம்' என்ற அமைப்பை உருவாக்குவதற்கான அடித்தளம் அமைத்தவரே ஆசைத்தம்பி என்றுகூட சொல்லலாம்.
1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியபோது, கருணாநிதி பொறுப்பு வகித்த திமுக பிரச்சாரக் குழுவில் உறுப்பினராக ஆசைத்தம்பி இடம் பெற்றார். விருதுநகர் நகர்மன்ற உறுப்பினராக தனது மக்கள் பணியைத் தொடங்கினார். திமுக முதன்முதலாகப் தேர்தல் களத்தில் நின்றபோது 1957-ஆம் ஆண்டு நின்றபோது சட்டமன்றத் தேர்தலில் நாம் 15 தொகுதிகளை வென்றோம். அந்த 15 பேரில் ஒருவர்தான் ஆசைத்தம்பி.
ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆயிரம் விளக்கில் பின்னாளில் நான் சட்டமன்ற உறுப்பினராக வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன். 1967-ல் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இதில், என்ன சிறப்பு என்றால், இரண்டு தேர்தலிலும் அந்தக் காலத்தில் செல்வாக்காக இருந்த இரண்டு அமைச்சர்களை தோற்கடித்தவர் ஆசைத்தம்பி.
ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக நின்ற அன்றைய அறநிலையத்துறை அமைச்சர் வெங்கடசாமி போட்டியிட்டார். அவரை ஆசைத்தம்பி தோற்கடித்தார். அதே போல் எழும்பூர் தொகுதியில், அன்றைய அமைச்சர் ஜோதி வெங்கடாசலம் அவரை எதிர்த்து நின்று அவரையும் தோற்கடித்தார்.
அதற்கு பிறகு 1977-ல் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் ஒரே ஒருவர் தான் வெற்றிபெற்றார். ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு, ஆசைத்தம்பி வடசென்னையிலிருந்து வெற்றி பெற்றார்" என்றார்.