"அண்ணாவின் அரசியல் வாரிசு..! கருணாநிதியின் கொள்கை வாரிசு..!" - சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டசபையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் அண்ணாவின் அரசியல் வாரிசு என்றும், தான் கருணாநிதியின் கொள்கை வாரிசு என்றும் பேசினார்.
தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு 16-வது சட்டமன்றத்தின் முதல் பேரவைக்கூட்டத்தொடர் கடந்த 21-ந் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரை மீது நன்றி தெரிவித்து கடந்த இரு தினங்களாக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரை மீது நன்றி தெரிவித்து பேசினார்.
அப்போது, அவர் பேசும்போது, “ என்னை முதல்வராக அமர வைத்த கொளத்தூர் தொகுதி மக்களுக்கும், தி.மு.க. உடன்பிறப்புகளுக்கும், தோழமைக் கட்சியினருக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி. 1920ம் ஆண்டு முதல் 1937ம் ஆண்டு வரை 17 ஆண்டுகள் நீதிக்கட்சி ஆட்சி செய்தது. சமூகநீதியை நீரூற்றி வளர்த்தது நீதிக்கட்சி. சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சியமைத்து நூறாண்டுகள் கடந்துவிட்டன. இந்த சமயத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்திருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.
எங்களின் ஆட்சி நீதிக்கட்சியின் தொடர்ச்சி என்பதை பெருமையுடன் கூறுகிறேன். நீதிக்கட்சியின் தொடர்ச்சி அண்ணா. அண்ணாவின் தொடர்ச்சி கருணாநிதி. கருணாநிதியின் தொடர்ச்சி நான், இந்த அரசு.
தமிழினத்தை நம்மால்தான் வளர்ச்சி பெற வைக்க முடியும் என்று மக்கள் நம்மை ஆட்சியில் அமரவைத்துள்ளனர். என்னுடைய தொலைநோக்குப் பார்வையைத்தான் ஆளுநர் தன் உரையில் கோடிட்டுக்காட்டியுள்ளார். பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் கடந்த 2 தினங்களாக சட்டப்பேரவையில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து உரையாற்றினர். அதனை அரசுக்கு அவர்கள் கூறிய ஆலோசனைகளாகவே எடுத்துக்கொள்கிறேன். ஏனெனில் நான் அண்ணாவின் அரசியல் வாரிசு. கருணாநிதியின் கொள்கை வாரிசு" என்று பேசினார்.
கடந்த 21-ஆம் தேதி தொடங்கிய இந்த கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின்போது முதல்-அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பொருளாதார நிபுணர்கள் குழு, வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட், நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்ட முன்வடிவு இயற்றப்படும், மத்திய அரசு இயற்றியுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி புதிய மசோதா நிறைவேற்றப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ஆளுநர் உரை மீது நடைபெற்று வரும் இந்த கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று முதல்வர் பேசியபோது மேற்கண்டவாறு பேசினார். மேலும், ஆளுநர் உரை யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்று கூறுவார்கள். ஆனால், ஆளுநர் உரையில் யானையும் இல்லை. மணியோசையும் இல்லை என்று முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆளுநர் உரையை விமர்சித்தார்.
அவரது விமர்சனத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ”யானைக்கு நான்கு கால்கள். தி.மு.க.வை யானை ஒன்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி. தி.மு.க.விற்கு சமூகநீதி, கொள்கை, மொழிபற்று, சுயமரியாதை மற்றும் மாநில உரிமை போன்ற 4 கொள்கைகளே பலம். அடக்கப்பட்ட யானைக்குதான் மணி கட்டுவார்கள். ஆனால், தி.மு.க. யாருக்கும் அடங்கிய யானை இல்லை. யாராலும் அடக்க முடியாத யானை” என்றார்.