(Source: ECI/ABP News/ABP Majha)
எல்லாருக்கும் எல்லாம்.. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்!
அண்ணா பிறந்தநாளில் தொடங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத்தலைவிகள் இனி மாதம்தோறும் பயன்பெற உள்ளனர்.
மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து, கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்று முடிந்தது.
முதற்கட்ட முகாம் ஜூலை 24ஆம் முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் மூலம் 1.70 கோடி விண்ணப்பங்கள் வரை பெற்றப்பட்டது. இதனை அடுத்து, செப்டம்பர் 5 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களில் உரிமைத் தொகைக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மொபைலில் மெசேஜ் மூலம் தகவலும் தெரிவிக்கப்பட்டது.
சிலருக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட மெசேஜும் அனுப்பப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கில் திட்டம் தொடங்கப்பட்ட (செப்டம்பர் 15) 5 நாட்களில் பணம் நேரடியாக செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"எல்லாருக்கும் எல்லாம் என்பதே இலக்கு"
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து ஆங்கில 'இந்து' நாளிதழுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்துள்ளார். இந்த நேர்காணலை மேற்கோள் காட்டி எக்ஸ் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், "எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கில் இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் முன்னோடியாக, தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், நாளை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் தொடங்கப்பட்டு, ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத்தலைவிகள் இனி மாதம்தோறும் பயன்பெற உள்ளனர்.
மகளிர் நலத் திட்டங்களில் புது அத்தியாயமான இத்திட்டம் குறித்தும், மாநிலத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதில் நமது அரசு கொண்டுள்ள உறுதியை வெளிப்படுத்தியும் மாண்புமிகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்றைய 'தி இந்து' நாளேட்டில் பேட்டி அளித்துள்ளார்" என பதிவிட்டுள்ளார்.
வழிகாட்டு நெறிமுறைகள்:
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதாவது, "கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் ஏற்கப்படவில்லை.
விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு முதல் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.
வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும் நேர்வுகளில், சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் கள ஆய்வு அறிக்கையினைப் பெற்று விசாரணை செய்வார். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும்.