Child Labour TN: கேள்விக்குறியாகும் சிறார் தொழிலாளர் மறுவாழ்வு திட்டம்: கவனிக்குமா அரசுகள்?
திட்டங்களுக்காக எந்த நிதியும் விடுவிக்கப்படாததால், சிறப்பு பயிற்சி மையங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த நிதியாண்டில் இருந்து தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கான தேசிய சிறார் தொழிலாளர் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சிறப்பு பயிற்சி மைய சிறார்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.400 ஊக்கதொகையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்றும் அறியப்படுகிறது.
தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாகக் காணப்படும் 15 மாவட்டங்களில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களின் மறுவாழ்வை ஏற்படுத்தும் இத்திட்டம் மத்திய அரசின் 100 % நிதி உதவியுடன் மாநில தொழிலாளர் துறையின் மேற்பார்வையில் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு செயல்படுகிறது.
9 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் குழந்தை தொழிலாளர் பணியிலிருந்து மீட்கப்பட்டு, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்படுகின்றனர். இவற்றில் இந்தக் குழந்தைகளுக்கு கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் மதிய உணவு, கல்வி உதவித்தொகை, மருத்துவப் பராமரிப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன. அதன்பின், இவர்கள் முறையான பள்ளிகளில் சேர்ந்து, படிப்பை தொடங்கும்வரை இந்த வசதிகள் செய்யப்படுகின்றன. ஐந்து முதல் எட்டு வயது வரையிலான குழந்தைகள் நேரடியாக முறையான பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் ஒத்துழைப்புடன் சேர்க்கப்படுகின்றனர்
மாவட்ட திட்ட சங்கங்களைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் thefederal என்ற ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில், " கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் இருந்து எந்த எழுத்துப்பூர்வ தகவல்களும் வரவில்லை. சிறப்பு பயிற்சி மையங்கள் தொடர்ந்து செயல்படுமா? மூடப்படுமா? என்ற ஐயப்பாடு நிலையில் உள்ளோம். மார்ச் 31, 2021க்குப் பிறகு திட்டத்தை நீட்டிக்கவில்லை.
கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஏராளமான சிறார்கள் பட்டினிக்கு இலக்காகி தினக்கூலி தொழிலாளர்களாக மாறியுள்ளனர். இந்த சூழலில், அலட்சியப் போக்குத் தொடர்ந்தால், திட்டம் முடக்கப்படும் சூழல் கண்டிப்பாக உருவாகும். இது, மாநிலத்தின் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கும்" என்று தெரிவித்தார்.
திட்ட அதிகாரிகள் சிலர் இது குறித்து கூறுகையில், " அந்தந்த மாவட்டத்தின் மீட்கப்பட்ட சிறார்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து, இரண்டு தவணைகளாக தலா ரூ 50-60 லட்சம் வரை நிதி ஒதுக்கப்படும். 2020-21 நிதியாண்டின் முதல் தவணை விடுவிக்கப்பட்டது. அதன்பிறகு, நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதன்பிறகு, தகவல் பரிமாற்றமும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதுதொடர்பான, கோரிக்கைக் கடிதத்துக்கும் பதிலளிக்கவில்லை" என்று தெரிவித்தார்.
2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார் தொழிலாளர்களின் எண்ணிக்கை 43.53 ஆக உள்ளது. தேசிய சிறார் தொழிலாளர் திட்டத்தின் கீழ் 2020-21 ஆண்டில் மட்டும் 58,000 சிறார்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
Year |
No. of children |
2015-16 |
59076 |
2016-17 |
30979 |
2017-18 |
45344 |
2018-19 |
50284 |
2019-20 |
66,169 |
2020- 21 |
58,000 |
திட்டங்களுக்காக எந்த நிதியும் விடுவிக்கப்படாததால், சிறப்பு பயிற்சி மையங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மாத ஊதியமின்றி, மாதம் வெறும் ரூ. 7 ஆயிரத்தை ஊக்கத் தொகையாக பெற்று வருகின்றனர். ஆனால், இந்த குறைந்த தொகை கூட கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பதுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், ஆசிரியர்கள் பலரும் பணியில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிறார் மறுவாழ்வு குழந்தைகளுக்காக பிரத்தியோகமாக பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை விட்டு செல்வது திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கைத்தை சீரழிக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், மாதந்திர கல்வித் தொகை நிறுத்தப்பட்டுள்ளதால், பட்டினியில் வாடும் பல குடும்பங்கள் மீண்டும் தங்கள் சிறார்களை பணிக்கும் அனுப்பும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
முன்னதாக, நாடாளுமன்ற கேள்விக்குப் பதிலளித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர், "சிறார் மறுவாழ்வு திட்டத்துக்காக 2020- 21 நிதியாண்டில் ரூ. 110 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், அதில் வெறும் 7.5 கோடி செலவழிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.