CycloneMichaung: ’நம்மிடம் இருக்கும் பெரிய சவால் என்ன தெரியுமா?’ பள்ளிக்கரணையில் ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சொன்னது என்ன?
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பள்ளிக்கரணையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளிக்கரணையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று (டிசம்பர் 10) ஆய்வு செய்தார்.
மிக்ஜாம் புயல்:
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனிடையே, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிசம்பர் 9) உத்தரவிட்டிருந்தார்.மேலும், இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இச்சூழலில், பள்ளிக்கரணையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார். அப்போது அவருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உட்பட பல்வேறு அதிகாரிகள் உடன் இருந்தனர். பின்னர், ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்த சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்தார்.
ஆய்வு செய்யும் ஒன்றிய குழு:
அப்போது பேசிய அவர், “சென்னை உள்ளிட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஒன்றிய குழு 2 நாட்கள் ஆய்வு நடத்த உள்ளது. இரண்டு குழுக்களாக பிரிந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை இந்த குழு ஆய்வு செய்யும்.
சென்னையில் தற்போது இயல்பு நிலை திரும்பிவருகிறது. தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து போன்ற அத்தியாவசிய தேவைகள் தற்போது சரியாகி வருகிறது. தண்ணீர் தேவைப்படும் பகுதிகளில் சொந்த பயன்பாட்டிற்காகவும் தண்ணீர் வழந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நம்மிடம் இருக்கும் சவால்:
இப்போது நம்மிடம் இருக்கும் ஒரே ஒரு சவால் குப்பைகள்தான். புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட குப்பைகளும் சுத்தம் செய்யப்படுவதற்கான வேலைகளும் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாளைக்குள் அனைத்து தெருக்களிலும் குப்பைகள் முழுமையாக அகற்றப்படும். நாளை முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால், அங்கு தண்ணீர் தேங்கமல் இருக்க மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்வது , குப்பைகளை அகற்றுவது போன்ற பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வெள்ளநிவாரணம் தொடர்பான அரசாணை நாளை வெளியாகும். அதில் அனைத்து தகவல்களும் இருக்கும். பல்வேறு பகுதிகளில் மழை நின்ற பின்னர் தண்ணீர் வேகமாக வடிந்துவிட்டது. தி.நகர் , சீத்தாம்மாள் காலனி போன்ற பகுதிகளில் எல்லாம் மழை நீர் கடந்த ஆண்டுகளில் எல்லாம் அதிகமாக தேங்கியிருந்தது. ஆனால், தற்போது அங்கு தண்ணீர் தேங்கவில்லை. நேற்றே மாநகர் முழுவது மின்சாரம் வழங்கியுள்ளோம்.
மாநகராட்சியில் உள்ள 6 பள்ளிகள் தாழ்வான பகுதியில் உள்ளதால், அங்கு தற்போது தண்ணீர் தேங்கி இருக்கிறது. அதை சரி செய்வதற்கான பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது” என்று தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறினார்