Shivdas Meena: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம்..!
Shivdas Meena: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான அறிவிப்பை தமிழ்நாடு முதன்மை செயாளர் வெளியிட்டுள்ளார்.
கூடுதல் பொறுப்பு என எதுவும் போடாததால் அவர் தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் தெரிவிக்கின்றன.
சிவ்தாஸ் மீனா வகித்த பொறுப்புகள்:
சிவ்தாஸ் மீனாவின் பூர்வீகம் ராஜஸ்தான். இவர் ஜெய்ப்பூரில் சிவில் எஞ்ஜினீயரிங் படிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். சிவ்தாஸ் மீனா 30 ஆண்டுகள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 செயலாளர்களின் ஒரு செயலாளராக இருந்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அவர் மத்திய துறைக்கு மாற்றப்பட்டார். மத்தியில் சுற்று சூழல் மற்றும் வனத்துறைக்கு கீழ், மாசு கட்டுப்பாடு மத்திய பிரிவின் தலைவராக இவர் பணியாற்றி வந்தார்.
அதன் பின் 2021 ஆம் ஆண்டு மீண்டும் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்பட்டார். திமுக ஆட்சியில் அவர் நகராட்சி நிர்வாக துறை செயலாலராக பதவி வகித்து வந்தார்.
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமணம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இவர் தலைமைச் செயலாளர் பதவி வகித்து வருவதால், அப்பதவியிலிருந்து மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி வருகிறது.