CM Visit to Delhi: இரண்டு நாள் டெல்லி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்.. என்ன விஷயம் தெரியுமா? முழு விவரம் இதோ..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 8.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்படுகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 8.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்படுகிறார்.
திமுக ஆட்சியில் முக்கிய திட்டமாக அறிவிக்கப்பட்டது தான் கிண்டி பன்னோக்கு மருத்துவமனை. இதற்கான கட்டுமான பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் இருப்பதால் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் திமுகவின் மறைந்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமாக கலைஞர் கருணாநிதியின் நினைவாக அவரது சொந்த ஊரான திருவாரூரில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் முக்கிய திட்டங்களாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த இரண்டு திட்டங்களின் திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை அழைக்க தமிழக அரசு சார்பில் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். மேலும் குடியரசு தலைவரை சந்தித்து திறப்பு விழாவிற்கு முறையாக அழைப்பு விடுக்கிறார். கலைஞர் கோட்டத்தில் குடியரசு தலைவர் நேரில் சென்று திறந்து வைப்பார் என்றும், அங்கிருந்து காணொலி காட்சி மூலமாக கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுப்பது மட்டுமல்லாமல் பல்வேறு விஷயங்கள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் பேச உள்ளார். அங்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாகவும், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாகவும் குடியரசு தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவார் என்றும் கூறப்படுகிறது. குடியரசு தலைவர் உடனான சந்திப்பிற்கு பிறகு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு நாளை இரவு 8.30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
கடந்த 4 மாதங்களாக டெல்லி செல்லாமல் இருந்த முதலமைச்சர் ஸ்டாலின், இன்று டெல்லி செல்கிறார். ஏற்கனவே, சட்ட மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதுகுறித்து குடியரசு தலைவரிடம் நேரடியாக வலியுறுத்த 4 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.