CM MK Stalin:மீனவர்கள் கைது விவகாரம்: வெளியுறவுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
CM MK Stalin: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்தபோது அவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று (23.08.2024) கைது செய்யப்பட்டனர். 2024-ல் மட்டும் 324 மீனவர்களும் 44 படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டும் அவர்களை விடுவிப்பதுடன் படங்களுகளையும் உடனடியாக மீட்க வேண்டும் என வலியுறுத்தியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதத்தின் மூலம் கேட்டுகொண்டுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ” நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் IND-TN-06-MM-1054 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நேற்று (23-08-2024) இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை, தான் ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 324 மீனவர்களும், 44 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற தொடர் கைது நடவடிக்கைகளால் தமிழ்நாட்டு மீனவ சமூகத்தினர் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருவதுடன் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும், கடந்த இரண்டு வாரங்களில், இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடலில் மீனவர்களைத் தாக்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டியது அவசியம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.