”காவலர்கள் மனித உரிமை மீறாத வகையில் நடந்துகொள்ள பயிற்சி அளிக்கப்படும்” - டிஜிபி சைலேந்திரபாபு
தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ஐபிஎஸ் சைலேந்திர பாபு பொறுப்பேற்றுக்கொண்டார்
தமிழ்நாடு டிஜிபியாக இருந்த திரிபாதி இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ஐபிஎஸ் சைலேந்திர பாபு பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்களிடம் காவலர்கள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மனித உரிமைகளை மதித்து நடந்துகொள்ள வேண்டும். அதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படும். காவலர்களின் குறைகள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இலக்குகளை அடைய பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முதல்வரிடம் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு இன்னும் 30 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
யார் இந்த சைலேந்திர பாபு?
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி சைலேந்திரபாபு பிறந்தார். குழித்துறையில் உள்ள அரசுப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த சைலேந்திர பாபு சிறுவயது முதலே விவசாயத்தின் மீது தீராத காதல் கொண்டவர். இந்த ஆர்வத்தின் காரணமாக மதுரையில் உள்ள வேளாண் பல்கலைகழகத்தில் விவசாயம் மற்றும் அறிவியல் படிப்பில் சேர்ந்து இளங்கலை பட்டமும் பெற்றார்.
கல்லூரி காலத்தில் அனைத்து மாணவர்களை போல கடைசி பெஞ்ச் மாணவராக இருந்த சைலேந்திரபாபு, ஒரு நாள் தனது கல்லூரியில் சிறப்புரையாற்றிய ஒருவரின் பேச்சில் ஈர்க்கப்பட்டு இனி “காவல்துறைதான் தன்னுடைய பாதை” என்று தீர்மானித்தார். இதை சைலேந்திரபாபுவே பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, அண்ணாமலை பல்கலைகழகத்தில் பொதுச்சட்டம் பாடப்பிரிவில் இளங்கலை பட்டமும், மக்கள் தொகை கல்வியில் முதுகலை பட்டமும் பெற்றார் சைலேந்திரபாபு. காவல்துறைதான் தன்னுடைய பாதை என்று தீர்க்கமாக தீர்மானித்த பிறகு, விடா முயற்சி மற்றும் கடினமாக உழைப்பு ஆகியவற்றின் மூலமாக 1987ம் ஆண்டு தனது 25வது வயதில் இந்திய காவல்துறை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்.
ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்ற பிறகு, ஹைதராபாத் காவல்துறை அகாடமியில் பயிற்சி பெற்ற பிறகு 1989ம் ஆண்டு கோபிச்செட்டிபாளையத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக (ஏ.எஸ்.பி.)யாக தனது காவல்துறை வாழ்க்கையை தொடங்கினார். பின்னர், சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றினார்.
இதையடுத்து, 1992ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டார். அவரது சிறப்பான பணி காரணமாக சிவகங்கை, கடலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் காவல்துறை கண்காணிப்பாளராக சைலேந்திராபுவை அப்போதைய அரசு நியமித்தது. பின்னர், சென்னையில் உள்ள அடையாறில் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்று சில காலம் பணியாற்றினார்.
2001ம் ஆண்டு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று விழுப்புரத்திலும், 2006ம் ஆண்டு ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னையிலும் பணியாற்றினார். 2012ம் ஆண்டு ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்ற சைலேந்திரபாபு திருச்சியில் டி.ஐ.ஜி.யாகவும், கரூர் தமிழ்நாடு காகித ஆலையில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். சிறப்பு காவல்படையின் ஐ.ஜி,யாக பணியாற்றிய சைலேந்திர பாபுவை, தமிழக அரசு கோவை மாநகர ஆணையராக நியமித்தது. கோவை மாநகரா ஆணையராக அவர் பணியாற்றியபோது, பள்ளி மாணவர்களின் நலன் கருதி கோவையில் உள்ள ஏராளமான பள்ளிகளில் கணினிப்பயற்சி குறித்தும், தற்காப்பு கலையான கராத்தே பயிற்சியும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். 2019ம் ஆண்டு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்ற சைலேந்திர பாபு தற்போது ரயில்வே துறையின் டி.ஜி.பி.யாக பொறுப்பு வகித்து வருகிறார்.