CM Stalin On Student Suicides : மாணவச் சமுதாயத்திற்கு முதல்வரின் அவசர வேண்டுகோள்.. கோரிக்கையும் உத்தரவாதமும்..
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 4 மாணவிகள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதில் கல்லூரி மாணவி ஒருவர் தற்போது சிகிச்சையில் உள்ளார். மற்ற 3 மாணவிகளும் உயிரிழந்துவிட்டனர்.
தமிழகத்தில், அண்மைக்காலத்தில் இல்லாத வகையில், அடுத்தடுத்து மாணவிகளின் தற்கொலைகள் அதிகமாகி வருகின்றன. நீட் தற்கொலைகள் ஒரு பக்கம் மிரட்டுகிறது என்றால் மறுபக்கம் பள்ளிக்கூடம் மற்றும் விடுதிகளில் தொடரும் தற்கொலைகளும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 7 மாணவிகள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதில் கல்லூரி மாணவி ஒருவர் தற்போது சிகிச்சையில் உள்ளார். மற்ற 3 மாணவிகளும் உயிரிழந்துவிட்டனர். மேலும் 3 மாணவச் செல்வங்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
அதிலும் கள்ளக்குறிச்சி மாணவியின் மரணமும் அதைத் தொடர்ந்து நீதி கேட்டு நடந்த போராட்டமும் பெரும் வன்முறையாக மாறி, 144 தடை உத்தரவு போடுமளவுக்குச் சென்றுவிட்டது. அதேபோன்று, திருவள்ளூர் மாணவியின் மரணமும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாடச்சுமை அழுத்தம், நீட் தேர்வு போன்ற போட்டித் தேர்வு அழுத்தம் ஆகியவற்றையும் தாண்டி, பாலியல் சீண்டல்கள், தொந்தரவுகள் போன்ற அழுத்தங்களும் மாணவிகளைத் தவறான முடிவுக்கு தள்ளிவிடுவதாக வெளிவரும் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. அங்கொன்றும், இங்கொன்றுமாக எப்போதாவது இருந்து வந்த இந்தத் தற்கொலைகள் திடீரென தொடர்கதையாக மாறுவது போல் தோன்றுவது, பெரும் அச்சம் தருகிறது.
முதலமைச்சரின் கோரிக்கையும், உத்தரவாதமும்:
இந்தச் சூழுலில்தான், சென்னையில் உள்ள குருநானக் கல்லூரியின் பொன்விழா நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் மாணவச் செல்வங்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டு மாணவ, மாணவியர் அறிவுக்கூர்மை கொண்டவர்களாக மட்டுமில்லாமல், உடல் உறுதியும் மன உறுதியும் கொண்டவர்களாக வளர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், எந்தச் சூழ்நிலையிலும் தற்கொலை எண்ணத்திற்கு இடம் தராமல், சோதனைகளைச் சாதனைகளாக்கி வளர வேண்டும் என்பதுதான் தமது ஆசை எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவச்செல்வங்களுக்கு, தற்கொலை எண்ணம் கூடவே கூடாது என்றும் தலைநிமிரும் எண்ணம்தான் இருக்க வேண்டும் எனத் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை கூடாது என்றும் உயிர்ப்பிக்கும் சிந்தனையே தேவை என்றும் மாணவ சமுதாயத்தைக் கேட்டுக் கொண்டார்.
அதே சமயம், மாணவிகளுக்கு பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ தொல்லை தரக்கூடிய எத்தகைய இழிசெயல் நடந்தாலும், தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்காது என்றும் முதலமைச்சர் எச்சரித்தார். அதுமட்டுமின்றி, உறுதியான நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைப் பெற்றுத் தரப்படும் என்ற உத்தரவாதத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் மாணவச் சமுதாயத்திற்கு தம் பேச்சின் மூலம் எடுத்துரைத்தார்.
மனநல நிபுணர்கள் கருத்து:
எந்தவகையான அழுத்தங்களால் பாதிக்கப்பட்டாலும், அதற்குத்தீர்வு தற்கொலை அல்ல என்பதை மாணவச் செல்வங்கள் உணர வேண்டும். அனைத்திற்கும் நேர்மறையான வகையில் தீர்வு காணமுடியும் என உளவியல் நிபுணர் டாக்டர் இந்திராணி கரன் ABP நாடு செய்தியாளரிடம் தெரிவித்தார். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஒரு நல்ல தூக்கம் போட்டுவிட்டு, அதைப் பற்றி யோசித்தால் நிச்சயம், நேர்மறையான தீர்வு கிடைக்கும். அதேபோல், பெற்றோர், சகோதர, சகோதரிகள், நல்ல நண்பர்கள், வழிகாட்டிகள் ஆகியோரிடம் இந்த அழுத்தங்கள் குறித்து பேசி முடிவெடுக்க முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என டாக்டர் இந்திராணி தெரிவிக்கிறார்.
உயிரை மாய்த்துக் கொள்வதைவிட, அதற்குப்பின், உயிர் இழந்தவரின் குடும்பத்தினரும், அவரைச் சுற்றியுள்ளோரும் படும் அவதியும் துன்பமும் சொல்லி மாளாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அதை உணர்ந்தாலோ போதும், உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர்த்துவிடுவார்கள். அனைத்திற்கும் நேர்மறையான தீர்வு நிச்சயம் உண்டு என்பதை இளம் தலைமுறையினர் உணர வேண்டும்.
அனைத்து பள்ளிகளிலும் வளர் இளம் பருவத்தில் உள்ள இருபாலோருக்கும் உளவியல் வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். தேவைக்காக, எதை எதையோ திணிக்கும் இந்தக் காலக்கட்டத்தில் நேர்மறை சிந்தனைகளை மாணவச் சமுதாயத்திடம் திணிக்கும் வகையில் உளவியல் வகுப்புகளைக் கட்டாயாக்க வேண்டும். ஏனோதானோவெனும் வகுப்புகளாக இல்லாமல், உண்மையிலேயே, உளவியல் வகுப்புகளாக இருப்பதை அரசின் பள்ளிக் கல்வித்துறையும் பள்ளிகளின் தலைமைகளும் உறுதி செய்ய வேண்டும் என உளவியல் நிபுணர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இன்றைய மாணவர்கள், நாளைய இந்தியா என்றெல்லாம் வார்த்தைகளில் மட்டும் ஜாலம் காட்டாமல், உண்மையிலேயே அவர்தம் எதிர்காலத்தில் அக்கறையோடு செயல்பட வேண்டிய கட்டாயம், பெற்றோர், ஆசிரியர், உடன்பிறந்தோர், நண்பர்கள், அரசு என நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அதை உணர்ந்தால் மட்டுமே தற்கொலை அரக்கனுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.