TN Govt on Sterlite | ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதிக்கக்கூடாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு..!
700 யூனிட் மின்சாரம் பயன்படுத்தி 1 டன் O2 தயாரிக்க முடியும். ஆனால் வேதாந்தா 6300 யூனிட்களைப் பயன்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் போதுமான ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதால் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் தயாரிப்பதற்காக தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதிக்க கோரி வேதாந்தா தாக்கல் செய்த மனுவில் இவ்வாறு தெரிவித்தது. 2021 ஏப்ரல் மாத இறுதியில், ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தற்காலிக அனுமதி அளித்துள்ளது. ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு, ஆக்சிஜன் உற்பத்திக்கான ஆலையை மேற்பார்வையிடும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவை உள்ளது, வேதாந்தாவின் ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்த தேவையில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதற்கு, பல்வேறு சமூக அமைப்புகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவத்தனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமுகச் செயற்பாட்டாளருமான நித்யானந்த் ஜெயராமன் இதுகுறித்து கூறுகையில், "ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்த தேவையில்லை எனக் கூறுவது அடிப்படையற்றது. ஏப்ரல் 23 அன்று, தமிழகத்தில் தினம்தோறும் 15,000 கேஸ் இருந்த நிலையில், அரசு உச்ச நீதி மன்றத்தில் உடனடியாக ஆக்சிஜன் தேவை இல்லை என நிலை எடுத்து. ஏப்ரல் மாதத்தில், வேதாந்தா செயல்பட அனுமதிக்கப்பட்டபோது, 2வது அலை அதிகரித்து கொண்டிருந்தது, O2 பற்றாக்குறை கடுமையாக மாறிக்கொண்டிருந்தது.
இன்று, ஆக்ஸிஜன் கிடைக்கிறது, ஆனால் மின்சாரம் இல்லை. பல மாவட்டங்களில் தினசரி மின்வெட்டுக்களை எதிர்கொள்கின்றன. வேதாந்தா உற்பத்தி செய்யும் ஒவ்வொரு டன் ஆக்ஸிஜனுக்கும் 5600 யூனிட் மின்சாரத்தை வீணாக்குகிறது. 700 யூனிட் மின்சாரம் பயன்படுத்தி 1 டன் O2 தயாரிக்க முடியும். ஆனால் வேதாந்தா 6300 யூனிட்களைப் பயன்படுத்துகிறது.
தினசரி சராசரியாக 30 டன் உற்பத்தி என அடிப்படையில், வேதாந்தா ஒரே நாளில் 168,000 யூனிட்களை வீணாக்குகிறது. இது ஒரு மாதத்திற்கு 1700 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க போதுமானது. வேதாந்தாவின் குறைந்த செயல்திறன் கொண்ட அலகு இயங்குவதில் அர்த்தமில்லை. உற்பத்தி இடைநிறுத்தப்பட வேண்டும். அலகு ஸ்டாண்ட்-பை முறையில் பராமரிக்கப்பட வேண்டும். அவசர நிலைமை ஏற்பட்டால், அதை மறுதொடக்கம் செய்வதை அரசாங்கம் பரிசீலிக்கலாம்” என்று பதிவிட்டார்.
தமிழ்நாட்டில், தற்போது 21,207 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், 3076 பேர் மருத்துவ ஆக்சிஜன் உதவி கொண்ட படுக்கையிலும் , 1252 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, தற்போது சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 20% பேர் நிமோனியா எனும் நுரையீரல் பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். முதல் அலையை விட இரண்டாவது அலையில், தீவிர நோய்த் தன்மை காரணமாக ஆக்சிஜன் தேவை அதிகரித்து காணப்பட்டது.
மேலும், வாசிக்க: