H Raja about Stalin: "ஒரு ஆண்டுக்கு முன் நான் சொன்னது நிரூபணமாகியுள்ளது" - முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து ஹெச்.ராஜா!
'Stalin is more dangerous than Karunanidhi' என ஒரு ஆண்டுக்கு கூறியது நிரூபணமானது என ஹெச். ராஜா சிவகங்கையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 18 சித்தர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு, மூத்த பாஜக நிர்வாகி, ஹெச். ராஜா வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் ஆளுநர் விவகாரம் குறித்து கேட்டபோது,"சட்டப்பேரவையில் ஆளுநர் உரை அன்று ஆளுநர் மட்டுமே பேச வேண்டும். முதலமைச்சர் பேசியது மரபு அல்ல.
இதை போன்று ஏற்க முடியாத விஷயங்களை ஆளுநர் படிக்காமல் தவிர்ப்பது என்பது புதிதல்ல. ஏற்கனவே ஆந்திரா, கேரளாவில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது . ஆளுநர் இந்த ஊழல் அரசாங்கத்தை குறித்து உரையில் கூறமால் தவிர்த்து விட்டு சென்றதற்கு, ஆளுநருக்கு முதலமைச்சர் நன்றி தெரிவிக்க வேண்டும்.
அவ்வையார் பாரதியார் குறித்த கவிதைகளை ஆளுநர் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று சொல்கிறார் ஸ்டாலின். 'Stalin is more dangerous than Karunanidhi' என ஒரு ஆண்டுக்கு முன்னே நான் சொன்னேன். தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் அதனை நிருபித்து கொண்டு இருக்கிறார். 'He is most immature Chief Minister' என்பது நிரூபணம் ஆகி உள்ளது” என்றார்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த பல்வேறு கருத்துக்களை வாசிக்காமல் தவிர்த்தது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆளுநரின் செயலைக் கண்டித்து சட்டசபையில் அங்கம் வகித்த தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோதே ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். அதேசமயம், பா.ஜ.க. ஆளுநருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் ஆளுநர் சொந்தமாக படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்றும், தமிழ்நாடு அரசு தயாரித்து தந்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை. உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.