தாயாரை பார்த்து கொள்ள இலங்கை செல்கிறாரா சாந்தன்? தமிழ்நாடு அரசு சொன்ன ஹேப்பி நியூஸ்!
இலங்கைக்கு சென்று தனது வயதான தாயாரை பார்த்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என சாந்தன் தரப்பில் அனுமதி கோரப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான சாந்தன் என்ற சுதேந்திரராஜா, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்தாண்டு விடுதலை செய்யப்பட்டார். இலங்கை தமிழரான அவர், திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே, இலங்கைக்கு சென்று தனது வயதான தாயாரை பார்த்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என சாந்தன் தரப்பில் அனுமதி கோரப்பட்டது.
சாந்தன் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டதா?
இந்த நிலையில், இலங்கைக்கு செல்ல சாந்தன்-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம், இதற்கான பயண ஆவணத்தை வழங்கியுள்ளது. ஆனால், இந்த பயண ஆவணம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரைதான் செல்லுபடியாகும். எனவே, இலங்கைக்கு சாந்தன் சென்றாலும் அவர் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்பாக இந்தியா திரும்ப வேண்டும். அல்லது பயணத்தை நீட்டிக்க இலங்கை அரசிடம் அனுமதி கோர வேண்டும்.
தமிழ்நாடு அரசுக்கு இலங்கை துணை தூதர் அனுப்பியுள்ள கடிதத்தின் நகலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2ஆம் தேதி, பிறப்பித்த பயண ஆவணத்தின் நகலை நீதிபதிகள் ஆர். சுரேஷ் குமார், கே. குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு, அரசு கூடுதல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ் சமர்பித்தார்.
பின்னர் பேசிய முனியப்பராஜ், "இலங்கை துணை தூதர் அனுப்பிய கடிதத்தை கடந்த 9ஆம் தேதி, சென்னையில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்திற்கு அனுமப்பியுள்ளோம்" என்றார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்:
இதை தொடர்ந்து பேசிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்.எல். சுந்தரேசன், "வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறித்து எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவிப்படவில்லை. ஆனால், கடிதத்தின் நகலை எனக்கு அரசு கூடுதல் வழக்கறிஞர் அளித்துள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தின் அறிவுறுத்தல் என்ன என்பதை அறிந்து கொள்ள நேரம் வேண்டும்" என கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், "இலங்கைக்கு செல்ல வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் அனுமதிக்கிறதா என்பதை அறிந்து கொள்ள வரும் பிப்ரவரி 29ஆம் தேதி வரை கால அவகாசம் தருகிறோம்" என்றார்கள்.
இலங்கை துணை தூதர் அனுப்பியுள்ள கடிதத்தில், "சாந்தன்-க்கு பயண ஆவணம் வழங்க வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கடந்தாண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி கோரிக்கை விடுத்தது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: Pulwama Terror Attack: பிப்ரவரி 14 இந்தியாவுக்கு கறுப்பு தினம்.. மறக்க முடியுமா? இன்று புல்வாமா தாக்குதல் நினைவு தினம்!