Sri lanka Crisis: இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்யக் கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு கடல் வழியாக வந்தனர்.
இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது. உணவு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது. அத்துடன் கடந்த மார்ச் மாதத்தில் அங்கு பணவீக்கம் சுமார் 18.5% சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. அத்துடன் உணவு பொருட்களின் விலையும் 30.1% வரை அதிகரித்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்ஷே மற்றும் இலங்கை அரசை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு கடல்வழியாக வந்தனர். இந்திய கடற்படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி, பாதுகாப்பு முகாமில் தங்க வைத்தனர்.
இந்த நிலையில், இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்றும், இலங்கை தமிழர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப தயார் என்றும், அரிசி, பருப்பு, மருந்துகளை தூத்துக்குடி துறைமுகம் வழியாக அனுப்ப தயாராக உள்ளதாகவும் பொருட்களை இந்தியத் தூதரகம் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சரிடம் தெரிவித்தார். வேதனையில் தவிக்கும் இலங்கைத் தமிழர்கள் குறித்து முதலமைச்சர் தனது கவலையை தெரிவித்துக் கொண்டார்.
மேலும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து தனது கவலையை தெரிவித்த முதலமைச்சர், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெய்சங்கரிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்