டெங்கு காய்ச்சல் அபாயம்; தமிழ்நாடு முழுவதும் நாளை 1000 சிறப்பு முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் நாளை சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”டெங்கு மற்றும் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. கிராமம் , நகரங்கள் பட்டியல் தயார் செய்து அந்தந்த மாவட்டங்களில் நோய் தடுப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்:
காய்ச்சல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக 23 ஆயிரத்து 717 தினசரி தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உயிர் காக்கும் மருத்துகள் போதிய அளவில் உள்ளது. இந்த இருப்புகள் கண்காணிக்கப்படுகிறது. பள்ளிகள், உணவகங்கள் ,திரையரங்குகள், பூங்காக்கள், திருமண மண்டபங்கள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றும் பணியும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் டெங்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு மற்றும் மழைக்கால தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இதனால் நோய் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. 2,972 அரசு தனியார் மருத்துவமனைகளில் கிராமம், நகரம் வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடபட்டுள்ளது .தமிழகத்தில் டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை 2 லட்சத்து 41 ஆயிரத்து 740 டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளது.
தயார் நிலையில் பணியாளர்கள்:
சென்னையில் மட்டும் 4,030 டெங்கு தடுப்பு பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வடகிழக்கு பருவமழை முடியும் வரை இது போன்ற முகாம்கள் தொடர்ச்சியாக நடைபெறும். அரசு மருத்துவமனைகளில் உள்ள, மாவட்ட அரசு மருத்துவமனைகள், வட்டார அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், எல்லா இடங்களிலும் பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டு,மருந்துகளும் கையிருப்பு இருக்கும்.
2017 -ஆம் ஆண்டு 23,906 பேருக்கு டெங்கு பாதிப்பு அதிகமாக ஏற்பட்டது. 65 பேர் டெங்கு காய்ச்சலில் இறந்தனர். எதிர்க்கட்சியின் தலைவர் ஆன அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அரசியலில் தனது இருப்பை காட்டிக் கொள்வதற்காகவே டெங்கு காய்ச்சல் பிரச்னையை அறிக்கையாக அளித்துள்ளார்.
1000 சிறப்பு முகாம்:
கடந்த ஆண்டு மக்கள் நல்வாழ்வு துறை மிகப்பெரிய கூட்டத்தை ஏற்படுத்தி டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். தமிழ்நாட்டில் நாளை ஒரே நாளில் 1,000 காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். தமிழகத்தில், டெங்குவால் 4,524 பேர் பாதிப்பு அடைந்துள்ளார்கள். இதுவரை டெங்கு காய்ச்சலால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்: ஜனவரி முதல் இப்போது வரை டெங்குவால் 4,524 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 பேருக்கு நேற்று டெங்கு பாதிப்பு கண்டறியபட்டுள்ளது. தற்போது 363 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். தேவையற்ற பதற்றம் தேவை இல்லை.
நேற்று மட்டும் தமிழகத்தில் 363 பேர் டெங்குவால், பாதிப்பு அடைந்துள்ளனர். சென்னையில் 54 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு அடைந்துள்ளனர். காய்ச்சல் வந்தால் உடனடியாக ரத்தம் பரிசோதனை செய்ய வேண்டும்”. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிவித்தார்.