TN Assembly: விதிமுறைகளை மீறி நிதி பெறப்பட்டுள்ளது.. ஆளுநர் மாளிகை செலவு குறித்து பேசிய பி.டி.ஆர்
தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தின் மீது பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆளுநர் மாளிகையின் செலவுகளை குறித்து பேசியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிரான தீர்மானம் மீது பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ”ஆளுநர் அவர்களுக்கு மூன்று பிரிவின் கீழ் நிதி ஒதுக்கப்படுக்கிறது. தலைமை செயலகம், வீட்டு செலவு, Discretionary grant என்ற பிரிவுகளின் கீழ் நிதி ஒதுக்கப்படுகிறது. 2 கோடியே 41 லட்சமாக இருந்த செலவு பட்ஜெட்டில் 2.86 கோடியாகவும், 3.63 கோடியாகவும் முதலமைச்சர் நிதியை உயர்த்தி இருக்கிறார். அதேபோல் ஆளுநர் வீட்டு செலவு – ஆட்சிக்கு வரும்போது 11.60 கோடியாக இருந்ததை 15.93 கோடியாகவும், 16.69 கோடியாகவும் உயர்த்தியுள்ளார். Discretionary grant என்பது 1937-இல் நிதி பிரிவில் இருக்கும் ஒரு பொதுவான விதியாகும். தமிழ்நாட்டில் 2011 – 12 ல் 8 லட்சம், 2016 -17 ல் 5 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய், 2018 -19 ல் ஒரு லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் என வெறும் ஒரு லட்சமாக இருந்த கிராண்ட்டை மூன்று மாதத்தில் முதல் 50 லட்சமாகவும் தற்போது 5 கோடியாகவும் மாற்றியுள்ளனர். இது பெட்டி கிராண்ட் என அழைக்கப்படும். இது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளது. Discretionary grant என்பது ஏழை எளிய மக்களின் மருத்துவ தேவைகளுக்கு, வாழ்வாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் பயன்படுத்த வேண்டும்.
5 கோடியாக நிதி வழங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து விதி மீறல்கள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அவையில் குறிப்பிட்ட ஆளுநர் மாளிகையின் செலவு குறித்த கருத்துக்களை வாபஸ் வாங்க விரும்புகிறேன். அட்சய பாத்திரம் திட்டத்திற்கு 4 கோடி வழங்கப்பட்டது, ஆனால் அட்சய பாத்திர என்ற பெயரை சொல்லி ஆளுநரின் வீட்டு செலவு கணக்குக்கு அந்த நிதி செலுத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒரு சிறிய தொகை மட்டுமே அட்சய பாத்திரத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுவரைக்கும் பெட்டி கிராண்ட் 5 கோடியாக மாற்றப்பட்டபின் மொத்த செலவு 18.38 கோடியாக உள்ளது. இந்த 18.38 கோடி ரூபாயில் 11.32 லட்சம் அவர்களின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த பணம் எங்கே செலவிடப்பட்டது என்பது அரசுக்கு தெரியாது. இது நிச்சயம் விதி மீறல்” என குறிப்பிட்டார்.
”எந்த வகைக்காக இது செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் தெரியாது. குறிப்பாக செப் 2021 வரைக்கும் இந்த நிதி எல்லாம் எதோ ஒரு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட நிதியாகும். அனைத்து மாநிலங்களிலும் Discretionary grant என்ற பிரிவில் குறைந்த அளவு நிதியே ஒதுக்கப்படுகிறது. பா.ஜ.க ஆளும் கர்நாடகாவில் 25 லட்சம், கேரளா 25 லட்சம், மேற்கு வங்காளம் 25 லட்சம் ஆக உள்ளது. செப் 2021 பிறகு இந்த தலைப்பின் கீழ் வந்த கட்டண செலவுகளை பார்த்தால் யுபிஎஸ்சி மாணவர்கள் கூட்டம் 5 லட்சம், தேநீர் விருந்து 30 லட்சம், கலாச்சார நிகழ்ச்சி 3 லட்சமாக உள்ளது. இவை அனைத்தும் இந்த தலைப்பின் கீழ் வராது.
மேலும் நிதி விதிமுறையின்படி ஒரே நபருக்கு மீண்டும் மீண்டும் நிதி ஒதுக்கப்பட கூடாது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் ஒரே நபருக்கு ரூ. 58,000 மூன்று மாதம் தொடர்ந்து அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் ராஜ் பவன் ஊழியர்களுக்கு போனஸ் என 18 மற்றும் 14 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசிடமிருந்து விதிமுறைகளை மீறி நிதி பெறப்பட்டுள்ளது. விதிமுறை மீறல்கள் இல்லாமல் இருக்க, முதலமைச்சர் வலியுறுத்தலுக்கு உடனடியாக கொண்டுவருவேன்” என பேசினார்.