”அவனெல்லாம்” - பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசி விமர்சித்த அமைச்சர் காந்தி..
ஓசூர் பகுதியில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒருமையில் பேசி விமர்சித்தார் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த, கெலவரப்பள்ளி அணைப் பகுதியில் வசிக்கும் 144 புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு, துணிமணிகள், சமையல் பாத்திரங்கள், எரிவாயு இணைப்புகள் ரூ.7 இலட்சத்து 93 ஆயிரத்து 223 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.டி.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பேசியபோது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வேலூர் மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் (02.11.2021) அன்று தமிழகத்தில் உள்ள 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகளுக்கு பதிலாக புதியதாக 3 ஆயிரத்து 510 வீடுகள் ரூ.142 கோடியே 16 இலட்சம் மதிப்பில் புதிய வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.தொடர்ந்து, கடந்த (17.11.2021) அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியில், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 572
பயனாளிகளுக்கு ரூ.9,08,535 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.
மேலும், வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 37 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 11 இலட்சம் மதிப்பில் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது.
அதனைத்தொடர்ந்து, இன்று ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி அணைப் பகுதியில் வசிக்கும் 144 புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு, துணிமணிகள், சமையல் பாத்திரங்கள், எரிவாயு இணைப்புகள் ரூ.7 இலட்சத்து 93 ஆயிரத்து 223 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து சமுதாய மக்களும் பயனடையும் வகையில் ஒவ்வொரு துறை சார்பாகவும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். குறிப்பாக கிராமப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளியில் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தினால் 50 இலட்சம் நபர்கள் பயனடைந்துள்ளனர். அதேப்போல மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இல்லம் தேடி கல்வி திட்டத்தையும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு அமைத்து போர்கால நடவடிக்கைகளை மேற்கொண்டார். கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு 1 நாளைக்கு 38 ஆயிரம் என்று இருந்ததை 1,000-க்கும் குறைவாக கொண்டு வந்து தமிழக மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாத்தார் என்று தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் காந்தி, “அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறையினரின் நடவடிக்கை பழிவாங்கும் செயலா? என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர்கள் 10 ஆண்டுகள் நடத்திய ஆட்சி, மேற்கொண்ட செயல்கள் குறித்து அனைவரும் அறிந்ததே இது நடைமுறையான செயல்தான் கருத்து சுதந்திரம் திமுக ஆட்சியில் தடுக்கப்படுவதாக அண்ணாமலை குறிப்பிட்டது குறித்து பத்திரிகையாளர் கேட்டதற்கு, ”அவனெல்லாம் ஒரு தலைவனா? அவனை பற்றி எல்லாம் நீ கேட்கலாமா?? வாய்க்கு வந்ததையெல்லாம் பேசும் அவன் படித்தவனை போல பேச வேண்டாமா? பதவி என்பது சில காலம்தான், மத்தியில் ஆட்சியில் இருப்பதால் தைரியமாக பேசி வருகிறான்” என விமர்சித்த அவர் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை ஸ்டாலின் வழங்கி வருகிறார்.
முடிந்த அளவிற்கு எதிர்கட்சியினர் புண்படாத வகையிலேயே நடந்துகொள்கிறார் அனைவருக்குமான நல்லாட்சி, மக்களாட்சியை அவர் வழங்கி வருவதாக பேசினார். கடந்த சில மாதங்களாகவே திமுக அதிமுகவை விட திமுக - பாஜக இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. தினமும் காலை மாலை என அறிக்கை பத்திரிகையாளர் சந்திப்பு என திமுக மற்றும் அதன் முக்கிய தலைவர்களை பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது