Vande Bharat: சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில்.. இன்று முதல் இயக்கம்..
சென்னை செண்ட்ரல் முதல் மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில், பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, சென்னை - கோவை, சென்னை - நெல்லை, சென்னை இருந்து பெங்களூர் வழியாக மைசூர் என மொத்த மூன்று ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கோவை - பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயிலை டிசம்பர் 30 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
Continued running of Weekly Special #Trains
— Southern Railway (@GMSRailway) January 2, 2024
The service of following trains has been extended, Passengers are requested to take on this and plan your #travel #SouthernRailway pic.twitter.com/6c78Tt9LUo
அந்த வகையில் பயணிகள் நலனுக்காக சென்னை செண்ட்ரல் முதல் மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், “இன்று (3 ஆம் தேதி) முதல் வரும் 31 ஆம் தேதி வரை சென்னை செண்ட்ரலில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மைசூரு செல்லும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில், (வண்டி எண்: 06037) அதேநாள் மதியம் 12.20 மணிக்கு மைசூரு சென்றடையும். மறுமார்க்கமாக, அதே தேதிகளில் மைசூருவில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு சென்னை செண்ட்ரல் செல்லும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் ( வண்டி எண்: 06038) அதேநாள் இரவு 7.20 மணிக்கு சென்னை செண்ட்ரல் வந்தடையும்.
இதேபோல், வரும் 7 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி சென்னை செண்ட்ரலில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு கோட்டயம் செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06091) மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயம் சென்றடையும். மறுமார்க்கமாக, வரும் 8 ஆம் தேதி மற்றும் 15 ஆம் தேதி கோட்டயத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06092) மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை செண்ட்ரல் சென்றடையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.